இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று கண்டியில் மல்வத்தை மகாநாயக்க தேரர் திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரரை சந்தித்தார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைப் பயணங்களை நினைவுகூர்ந்த இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இலங்கை மக்களுக்காக பிரதமரின் மூலம் இந்திய மக்கள் உணரும் வலுவான தொடர்பை மீண்டும் வலியுறுத்தினார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் நாளை இலங்கையில் உள்ள மத வழிபாட்டுத் தலங்களுக்கு சூரிய ஒளி மின்சாரம் வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த திட்டத்திற்காக, புத்த மத உறவுகளை மேம்படுத்துவதற்காக ஒதுக்கப்பட்ட 107.47 கோடி ரூபாய் இந்திய மத்திய அரசின் மானியத்தில் 82.40 கோடியை இந்தியா ஒதுக்கும் என்று இந்திய நிதி அமைச்சகம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் தெரிவித்துள்ளது.
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் போது இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் வழங்கிய பொருளாதார உதவிகளுக்கு நன்றி தெரிவித்த திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரர், இலங்கையின் நம்பிக்கைக்குரிய நண்பராக இந்தியாவே இலங்கைக்கு உடனடியாக உதவ முன்வந்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.