தமிழ் அரசியலால், அரசியலில் துஸ்பிரயோகம் செய்யப்பட்ட பல விடயங்கள் உள்ளன. அதையெல்லாம் பட்டியல்படுத்த ஆரம்பித்தால், அது பெரிய பாரதமாகி விடும். அதனால் அந்த பெரிய பட்டியலை தவிர்த்து, ஒரு விடயத்தை பற்றி பேசலாம் என நினைக்கிறேன்.
இவ்விதமாக, தமிழ் அரசியலில் அதிகம் துஸ்பிரயோகம் செய்யப்பட்ட வார்தைகளில் ஒன்று- சிவில் சமூகம்.
யாராவது ஒருவர் விரும்பினாலோ அல்லது ஓரிருவர் விரும்பினாலோ, யாழ்ப்பாண சிவில் சமூகம் என்ற பெயரில் ஒரு அறிக்கை விடலாம். அரசியல் கட்சிகள், நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு இலவச ஆலோசனைகள் வழங்கலாம்.
அல்லது, சிவில் சமூகம் என்ற பெயரில் யாராவது ஒருவர் மைக்கின் முன்னாலிருந்து ஆலாசனை கூறலாம்.
இதற்கு மேல், தமிழ் சூழலில் சிவில் சமூகத்துக்கு எந்த அர்த்தமோ, பாத்திரமோ கிடையாது. தென்னிந்திய சினிமாவில் வரும் ஐயிட்டம் டான்ஸ் போன்றதுதான், தமிழ் சிவில் சமூகம். அவர்கள் அவ்வப்போது பொழுதுபோக்காக எதையாவது பேசுவார்கள். அவர்களின் கருத்தை அரசியல்வாதிகளோ, செயற்பாட்டாளர்களோ, பொதுமக்களோ கருத்தில் கொள்வதில்லை.
ஆனாலும் சிவில் செயற்பாட்டாளர்கள் எனப்படுபவர்கள் சற்றும் மனம் தளராத விக்கிரமதாதித்தனை போல, மீண்டும் மீண்டும் பல்வேறு முயற்சிகளில் ஈடுபவர்.
அப்படியான முயற்சியொன்றில் தற்போதும் ஈடுபடுகிறார்கள்.
சிவில் சமூகத்தின் முயற்சியென்றாலே, வேலைக்கு ஆகாத வேலையென்றுதான் படிப்பவர்களிற்கு தோன்றும். அப்படியான வேலையொன்றைத்தான் ஆரம்பிக்கிறார்கள்.
அதாவது, பொது வேலைத்திட்டமொன்றில் அனைத்து தமிழ் கட்சிகளிற்குமிடையில் ஒருமித்த நிலைப்பாட்டை ஏற்படுத்தப் போகிறார்களாம். அதில் சில மசாலாக்களை போல, 13வது திருத்தம் உள்ளிட்ட சில சமாச்சாரங்களையும் சேர்த்து பேசப்போகிறார்கள்.
13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதில் ஒருமித்த நிலைப்பாடு, அனைத்து தமிழ் கட்சிகளுக்குமிடையில் ஒருமித்த நிலைப்பாடு ஏற்படுத்துவதே நமது சிவில் சமூகத்தினரின் திட்டம்.
சிவில் சமூகம் என்றதும் விபரீதமாக சிந்திக்காதீர்கள். ஏற்கெனவே, வெவ்வேறு பெயர்களில் தமிழ் அரசியல், பத்திரிகை பரப்பில் ஊடாடும் 3 பேர் மாத்திரமே, இப்பொழுது சிவில் சமூகம் என்ற பெயரில் இந்த முயற்சியை ஆரம்பித்துள்ளனர்.
நவம்பர் மாத நடுப்பகுதியில்- 17,18ஆம் திகதிகளை மையப்படுத்தியதாக யாழ்ப்பாணத்தில் இந்த சந்திப்பு நடக்கலாம்.
யாழ்ப்பாணத்தில் இராணுவத்தின் பின்னணியில் இயங்குவதாக கூறப்படும் அருண் சித்தார்த் என்ற நபர், யாழ் சிவில் சமூகம் என்ற பெயரை பயன்படுத்துகிறார். தனியொருவரே சிவில் சமூகம் என்ற பெயரை பயன்படுத்தலாமென்றால், நாங்கள் 3 பேர் ஏன் அதை பயன்படுத்தக்கூடாது என அவர்கள் நினைத்தார்களோ என்னவோ!