யாழ்ப்பாண பல்கலைகழக சட்டபீடத்தில் இன்று (31) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கொன்று மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் எதிர்ப்பினால் நிறுத்தப்பட்டுள்ளது.
கொழும்பை சேர்ந்த சுவஸ்திகா என்ற இளம்பெண் சட்டத்தரணி அண்மையில் நடந்த கூட்டமொன்றில் விடுதலைப் புலிகள் அமைப்பை பாசிச அமைப்பென குறிப்பிட்டிருந்தார். இந்த இளம்பெண் சட்டத்தரணி, அண்மையில் கொழும்பில் நடந்த அரகலய போராட்டத்தின் மூலம் புகழ் வெளிச்சத்தை பெற்றிருந்தார்.
அரகலய போராட்டக்காரர்கள் நிதிப் பின்னணியில் இயங்கியவர்கள் என்ற பரவலான விமர்சனத்தின் மத்தியில், அந்த போராட்டம் பெரும் மாற்றங்களை ஏற்படுத்த முடியாமல் அடங்கியிருந்தது.
இந்த நிலையில், யாழ்ப்பாண பல்கலைகழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கு ஒன்றில் சுவஸ்திகா என்ற இளம்பெண் உரையாற்றுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
அவர் முன்னதாக தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் பொதுமக்களும், பல்கலைகழக மாணவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில், சட்டபீட நிர்வாகத்துடன் பல்கலைகழக மாணவர்கள் நேற்று பேச்சு நடத்தியிருந்தனர். இதன்போது, கருத்தரங்கை நிறுத்த முடியாது என சட்டபீடம் குறிப்பிட்டிருந்தது.
இதையடுத்து, இன்று கருத்தரங்கு நடக்கும் சமயத்தில் போராட்டம் நடத்த மாணவர்கள் திட்டமிட்டிருந்தனர்.
இந்த நிலையில், யாழ்ப்பாண பல்கலைகழக துணைவேந்தரின் தலையீட்டில், இன்றைய கருத்தரங்கு இரத்து செய்யப்பட்டுள்ளது.