இலங்கை தமிழ் அரசு கட்சியின் மூத்த தலைவர் இரா.சம்பந்தன், தனது நாடாளுமன்ற உறுப்புரிமையை துறக்க வேண்டுமென, அந்த கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்த கருத்து, கட்சிக்குள் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுமந்திரனின் கருத்தால் இரா.சம்பந்தனும் கடுமையாக அதிருப்தியடைந்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பில் தன்னை நேரில் சந்திக்குமாறு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவை அழைத்துள்ளார்.
நவம்பர் 3 அல்லது 4 ஆம் திகதி இருவரும் சந்தித்து, சுமந்திரன் விவகாரம் தொடர்பில் ஆராயவுள்ளனர்.
எதிர்வரும் 5ஆம் திகதி வவுனியாவில் நடக்கவுள்ள கட்சியின் மத்தியகுழு கூட்டத்தில் இந்த விவகாரம் முக்கிய பேசுபொருளாக இருக்குமென கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் தமிழ்பக்கத்திடம் தெரிவித்தனர்.
எம்.ஏ.சுமந்திரனின் கருத்தினால் இரா.சம்பந்தன் கடுமையாக கோபமடைந்துள்ளதாக தமிழ்பக்கம் அறிகிறது.
கட்சித்தலைவர் மாவை சேனாதிராசாவுடன் நீண்டநேரம் தொலைபேசியில் உரையாடிய பின்னர், இந்த விவகாரம் பற்றி நேரில் ஆராய்வதற்காக தன்னை சந்திக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
இரா.சம்பந்தனும் மற்றையவர்களும் பேசும்போது, இரா.சம்பந்தனை நன்கு அறிந்த ஒருவரின் துணை தேவை. சம்பந்தன் பேசுவதை நெருக்கமாக இருந்து கேட்டு மற்றையவர்களுக்கு தெரியப்படுத்துவதுடன், மற்றையவர்கள் பேசுவதை சம்பந்தனின் காதுக்குள் கூறவும் வேண்டும். இதனை இருவர் தற்போது செய்து வருகிறார்கள். ஒருவர்- சம்பந்தனின் மகன். மற்றையவர்- எம்.ஏ.சுமந்திரன்.
சுமந்திரன் விவகாரமென்பதால், சுமந்திரனை இந்த சந்திப்புக்கு அழைக்க வாய்ப்பில்லை. இரா.சம்பந்தனின் மகனே பேச்சுவார்த்தைக்கு துணையாக இருக்க வேண்டும். அவர் தற்போது திருகோணமலையில் தங்கியுள்ளார். அதனால் சம்பந்தன்- மாவை சந்திப்பு 3 அல்லது 4ஆம் திகதிகளில் திட்டமிடப்பட்டுள்ளது.