யாழ் நகரிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தினால் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.
யாழ். காங்கேசன் துறை வீதியில் ஆலய பொருட்களை விற்பனை செய்யும் வர்த்த நிலையம் ஒன்றிலேயே நேற்றிரவு (26) இத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
யாழ் காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள குறித்த வர்த்தக நிலைய உரிமையாளர் இன்றைய வர்த்தக நடவடிக்கைகளை முடித்துவிட்டு வர்த்தக நிலையத்தை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.
இந்த நிலையில் திடீரென வர்த்தக நிலையம் தீ பிடித்து எரிவதை அருகிலுள்ள வர்த்தக நிலையத்தவர்களும் வீதியால் சென்றவர்களும் அவதானித்துள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டிருந்தது.
இதனையடுத்து குறித்த வர்த்தக நிலைய உரிமையாளருக்கு தகவல் வழங்கியதுடன் மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினருக்கும் தெரிவிக்கப்பட்டது.
இதன் பின்னர் அங்கு வந்த தீயணைப்பு பிரிவினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அத்தோடு மின்சார சபையினருக்கும் அறிவிக்கப்பட்டு மின்சார இணைப்பும் துண்டிக்கப்பட்டது.
ஆனாலும் வர்த்தக நிலையத்தில் இருந்த பொருமளவிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகியதுடன் வர்த்தக நிலையத்திலும் சேதம் ஏற்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த வர்த்தக நிலையத்தில் தீ பற்றியதை அவதானித்து உடனடியாக செயற்பட்டதாலேயே அங்கு தீ பரம்பல் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டு உள்ளதாக சம்பவ இடத்தில் நின்றவர்கள் தெரிவித்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாண பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து அங்கு வந்த பொலிஸார் ஆரம்பகட்ட விசாரனைகளை முன்னெடுத்தனர்.
இதில் மின்னொழுக்கு காரணமாகவே தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலீஸார் தெரிவித்துள்ளனர்.