சங்கிலி அறுத்துக் கொண்டு தப்பிக்க முயன்ற திருடர்களை துணிச்சலாக தாயார் ஒருவர் துரத்திச் சென்ற போது மோட்டார் சைக்கிளை விட்டுவிட்டு திருடர்கள் தப்பியோடியுள்ளனர்.
கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட கோயிலாமனைச் சந்தியில் நேற்று (26) காலை 11:30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
முன்பள்ளியில் இருந்து மகளை ஏற்றிக் கொண்டு கோயிலாமனை, அண்ணமார் கோவிலடியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த இளம் தாயை வழிமறித்த மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் நபர் ஒருவரின் பெயரைச் சொல்லி வினாவியுள்ளனர்.
அவரை எனக்குத் தெரியாது என்று கூற, திருடர்கள் குறித்த இளம் தாயை மோட்டார் சைக்கிளுடன் தள்ளி கீழே வீழ்த்தியுள்ளனர்.
வீழ்ந்த பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த 3/4 பவுண் தங்கச் சங்கிலியை அறுத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளுடன் தப்பித்துள்ளனர்.
A9 வீதியால்ப் பயணித்தவர்கள் இதனை அவதானித்து உடனேயே திருடர்களை மடக்கிப் பிடிக்க முற்பட்ட போது, மோட்டார் சைக்கிளை கைவிட்டு விட்டு தப்பித்துச் சென்றுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கப்படது. சம்பவ இடத்திற்கு விரைந்த கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.