தமிழர்களின் வாழ்வுரிமை காக்க போராட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றிகள் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் உத்தியோகபூர்வ பேச்சாளர்
சுரேஷ் க.பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்-
அனைத்து தமிழ் முஸ்லிம் கட்சிகளின் கோரிக்கைகளுக்கிணங்க பல்வேறு அச்சுறுத்தல்கள், எதிர்ப்பிரச்சாரங்கள், கிண்டல்கள், கேலிகளுக்கு மத்தியில் ஜனநாயக விழுமியங்களை மதித்து, நாம் விடுத்த அழைப்பினை ஏற்று முழு முடக்க ஹர்த்தால் போராட்டத்தில் ஈடுபட்டு எமது உரிமைக் குரலினை அனைவரது காதுகளிலும் எட்டும்படிச் செய்த வர்த்தக சங்கத்தினருக்கும், ஊழியர் சங்கத்தினருக்கும், முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் ஓட்டுனர்கள் சங்கத்தினருக்கும் தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தினருக்கும் ஏனைய தொழிற்சங்கத்தினருக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
புலனாய்வுத் துறையினர் எமது போராட்டத்தை முடக்குவதற்கு மேற்கொண்ட பல முயற்சிகளும் உங்களது துணிவினால் முறியடிக்கப்பட்டுள்ளதையும் நாம் நினைவுகூர்கிறோம்.
தியாகங்களினூடாகவே வளர்ந்த தமிழ்த் தேசிய இனத்திற்கு உங்களின் தியாகம் மேலும் ஒரு வைரக்கல்லாக அமைந்துள்ளது. தமிழ் மக்களுக்கான நீதி என்பது முற்றாக மறுதலிக்கப்பட்டு, புத்தகோயில்கள், சிங்களக் குடியேற்றங்கள் என்று அவர்களது இருப்பே கேள்விக்குள்ளாக்கப்பட்டு, தமிழ் மக்கள் நிர்க்கதியாக நிறகக்கூடிய ஒரு சூழ்நிலையில், தமிழ் மக்களின் ஒட்டுமொத்தமான கவலைகளையும் கண்டனங்களையும் தெரிவிக்கும் முகமாகவும் இராஜதந்திரிகளுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் தமிழ் மக்களின் இன்றைய நிலையை வெளிப்படுத்தும் முகமாகவும் இந்த ஹர்த்தால் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. ஒருசில ஊடகங்கள் தங்களது சொந்த நிகழ்ச்சிநிரல் காரணமாக ஆரம்பத்திலிருந்தே இந்தப் போராட்டத்திற்கு எதிரான கருத்துகளை வெளியிட்டு வந்த பொழுதிலும் மக்கள் ஒருமுகமாக நின்று இதனை ஒரு வெற்றிகரமான போராட்டமாக மாற்றியுள்ளனர்.
மக்கள் மத்தியில் கடந்த பத்து நாட்களாக நாம் மேற்கொண்ட பிரச்சாரங்களும் தொழிற்சங்கங்கள் மற்றும் பொது அமைப்புகளுடன் நாங்கள் மேற்கொண்ட கலந்துரையாடல்களும் இந்தப் போராட்டம் வெற்றியடையக் காரணமாக அமைந்தது. பரீட்சை காரணமாக மாணவர்கள் பாடசாலைக்குச் சென்றார்கள் என்பதும் அரச உத்தியோகத்தர்கள் எப்பொழுதும் இத்தகைய போராட்டங்களில் கலந்துகொள்வதில்லை என்பதும் வெளிப்படையானது. ஆகவே, அவற்றைத் தவிர்த்துப் பார்க்கின்றபொழுது, இந்த ஹர்த்தால் ஊடாக மக்கள் தெரிவித்த கண்டனங்கள் என்பது உரியவர்களின் காதுகளுக்கு எட்டியிருக்கும் என்று நம்புகின்றோம். போராட்டத்தில் கலந்துகொண்டு அதனை வெற்றியடையச் செய்த அனைவருக்கும் இதனை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்று அரும்பாடுபட்டு தமது கருத்துகளை ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் பதிவுசெய்த அனைவருக்கும் எமது நன்றிகள்.
– என தெரிவித்துள்ளார்.