வடக்கு கிழக்கில் நாளை (20) கதவடைப்பு மேற்கெள்வது பற்றி இதுவரை யாரும் தம்முடன் தொடர்பு கொள்ளவில்லையென கல்முனை வர்த்தக சங்க தலைவர் கே.எம்.எம். சித்தீக் குறிப்பிட்டார்.
வடக்கு – கிழக்கில் எதிர்வரும் ஒக்டோபர் 20ஆம் திகதி பூரண கதவடைப்பு மேற்கொள்ளுமாறு தமிழ் கட்சிகள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளன.
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு இராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேற நிர்பந்திக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு வெளியிட்டு வடக்கு கிழக்கில் கதவடைப்பு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்-
எமது பிரதேசத்தில் வெள்ளிக்கிழமை வழமை போன்று கடைகள் மூடப்படும். கதவடைப்பு விடயமாக எந்த தரப்பும் இதுவரை எம்மை தொடர்பு கொள்ளவில்லை. இந்த விடயம் குறித்து எமக்கு தெரியாது. சந்தைகள் வழமை போன்று இயங்கும். கதவடைப்பு தொடர்பில் இதுவரை எமக்கு அறியத்தரவில்லை என்பதுடன் அவ்வாறு அறிவித்தால் எமது சங்கம் பரிசீலனை செய்ய தயாராக உள்ளதாக குறிப்பிட்டார்.
வடக்கு கிழக்கு கதவடைப்பு தொடர்பில் தமிழ் கட்சிகள் யாழ் நகரில் கூடி அழைப்பு விடுத்திருந்தன. யாழ் நகர வணிகர் கழகத்துடன் மட்டும் கலந்துரையாடி கதவடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தன. யாழ் நகருக்கு வெளியில் செல்லவே கட்சிகளின் தலைவர்கள் ‘பஞ்சிப்பட்டு’ விட்டனர். யாழ்ப்பாண நகருக்கு வெளியில் உள்ள எந்தவொரு வர்த்தகர் சங்கத்துடனும் கட்சிகள் கலந்தரையாடவில்லையென்பது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-பாறுக் ஷிஹான்-

