20ஆம் திகதி கதவடைப்பு என தமிழ் கட்சிகளின் தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ள நிலையில், அதற்கு எதிராக அரச தரப்பினரும் தீவிரமாக செயற்பட்டு வருகிறார்கள்.
யாழ்ப்பாண நகரத்தில் கூடி, 20ஆம் திகதிக்கு தமிழ் தரப்பினர் அழைப்பு விடுத்திருந்தனர். எனினும், அவர்களால் யாழ்ப்பாண நகரத்துக்கு வெளியில் செல்ல முடியாமல் இருந்தது. பலத்த விமர்சனங்களின் பின்னரே தற்போது கிளிநொச்சி, வவுனியா என சில இடங்களுக்கு சென்றுள்ளனர்.
என்றாலும், இந்த கதவடைப்பு அறிவிப்பின் பின்னர், அழைப்பு விடுத்த கட்சிகளின் தலைவர்கள் கிழக்கிற்கு சென்று அங்கு கலந்துரையாடல் நடத்துவதென தீர்மானித்தனர். கிழக்குக்கு செல்வது பற்றியே, யாழ்ப்பாணத்தில் 2 முறை கூடி கலந்துரையாடிய போதிலும், அவர்கள் யாராலும் கிழக்குக்கு செல்ல முடியவில்லை.
தமிழ் அரசு கட்சியின் மூத்த துணைத்தலைவர் பொன்.செல்வராசாவின் இறுதிச்சடங்கிற்காக மட்டக்களப்பு சென்ற மாவை சேனாதிராசா மட்டுமே கதவடைப்பு பற்றி கிழக்கில் கலந்துரையாடினார்.
இப்படியாக தமிழ் கட்சிகள் “பிரதேசசபை கட்சிகளாக“ மாறிவரும் நிலையில், கதவடைப்புக்கு எதிராக அரச தரப்பும், சரத் வீரசேகரவின் ஆதரவாளர்களும் தீவிரமாக செயற்பட தொடங்கியுள்ளனர்.
இன்று யாழ்ப்பாணத்தில் இரண்டு மர்ம நபர்கள் கதவடைப்புக்கு எதிராக களமிறக்கப்பட்டிருந்தனர்.
அச்சுவேலியில் இன்று பகல் ஒருவர் கதவடைப்பு பதாதை ஏந்தியபடி நின்றார்.
இதுதவிர, இன்னும் ஓருவர் கொடிகாமம், அச்சுவேலி பகுதிகளில் கதவடைப்புக்கு எதிரான துண்டுப்பிரசுரங்கள் வழங்கினார்.