அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் நரம்பியல் சத்திரசிகிச்சைப் பிரிவினால் அண்மையில் மயக்க மருந்து இன்றி விழித்திருந்த நோயாளியின் மூளையிலுள்ள கட்டியை அகற்றும் சத்திரசிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
சத்திரசிகிச்சையின் போது நோயாளி தாமரை மலரை வரைந்துள்ளார்.
உடலின் வலது பாதியின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தும் பகுதிக்கு அருகில் அவரது இடது மூளையின் முன்புறத்தில் இருந்த கட்டியை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். இவ்வாறான சத்திரசிகிச்சையானது நாட்டிலுள்ள அரச வைத்தியசாலையொன்றில் முதன்முறையாக 2020ஆம் ஆண்டு அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டதுடன், இதே மருத்துவக் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட மூன்றாவது வெற்றிகரமான சத்திரசிகிச்சை இதுவாகும்.
அனுராதபுரம் நொச்சியாகம பிரதேசத்தில் வசிக்கும் 36 வயதுடைய ஓவியர் ஒருவரே இந்த அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இது போன்ற ஒரு சிக்கலான அறுவை சிகிச்சைக்கு பொதுவாக நோயாளி முழுமையாக மயக்க நிலைக்குள்ளாக்கப்பட வேண்டும். ஆனால் இந்த அறுவை சிகிச்சையில் நோயாளி முழுமையாக மயக்க நிலைக்குள்ளாக்கப்படவில்லை. வலியை உணராதவாறு குறைந்தபட்ச தூக்கத்தில் வைக்கப்பட்டார்.
இந்தவகை அறுவை சிகிச்சையின் போது, நோயாளியுடன் தொடர்ந்து தொடர்பு கொண்டு, அவரது நினைவாற்றலைச் சரிபார்த்து, வலது கை, காலை அசைப்பது போன்ற செயல்களைச் செய்வதன் மூலம், மூளையின் உணர்திறன் பகுதிகளைப் பாதுகாத்து நோயியல் பகுதியை (கட்டி) அகற்ற முடியும்.
இந்த சத்திரசிகிச்சைக்குள்ளாகிய ஓவியர் சமன் ஜயசிங்க சத்திரசிகிச்சையின் போது தாமரை மலரை வரைந்து வைத்தியர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் நரம்பியல் சத்திரசிகிச்சை பிரிவு (31) நுழைவாயிலில் உள்ள புத்தர் சிலைக்கு பின்னால் உள்ள சுவரில் இந்த நோயாளர் முன்னர் (நோய்வாய்ப்படுவதற்கு முன்னர்) ஓவியத்தை வரைந்துள்ளதாக வைத்தியசாலை ஊழியர்கள் தெரிவித்தனர்.
அறுவைசிகிச்சைக்குப் பிறகு நோயாளி எந்த சிக்கலும் இல்லாமல் மருத்துவமனையை விட்டு வெளியேறியதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் நரம்பியல் சத்திரசிகிச்சை நிபுணர்களான டொக்டர் மதுஷங்க கோமஸ், டொக்டர் ரொஹான் பாரிஸ் மற்றும் மயக்க மருந்து நிபுணர்களான டொக்டர் லெவன் காரியவசம், விஷகா கெர்னர், திலன் ஹேரத் உள்ளிட்ட குழுவினரால் இந்த சத்திரசிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.