பொதுமக்களின் முறைப்பாடுகளைப் புறக்கணித்த 9 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு குற்றப்பத்திரிகைகளும், 19 பேருக்கு எச்சரிக்கைப் பத்திரங்களும் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
பொலிஸ் நிலையங்களுக்கு பொதுமக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் பொலிஸ் தலைமையகத்தின் அறிவுறுத்தல் சுற்றறிக்கையின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படாத 125 சம்பவங்கள் தொடர்பில் பொலிஸ் மா அதிபர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவங்களில் இருந்து 84 கோப்புகள் விசாரிக்கப்பட்டு, 28 கோப்புகளுக்கு குற்றப்பத்திரிகை மற்றும் எச்சரிக்கைப் பத்திரிக்கைகள் வழங்கப்பட உள்ளன என்றார்.
இந்தக் குற்றச்சாட்டுகளைப் பெற்ற அதிகாரிகளில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளும் உள்ளடங்குவதாகவும், அவர்கள் எதிர்வரும் காலங்களில் அந்தப் பதவிகளில் இருந்து நீக்கப்படுவார்கள் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.