கந்தானை கூரியர் சேவை நிறுவனமான KD Express இல் பணிபுரியும் யுவதி ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் அதன் உரிமையாளரும் மனைவியும் தற்போது கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அந்த நிறுவனத்தில் பணிபுரியும் யுவதியை, தம்பதியினர் கொடூரமான முறையில் தாக்கும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து, அந்த நபர்கள் குறித்த தகவலைப் பெற்ற பொலிஸார், நேற்று நாகொட பிரதேசத்தில் வைத்து தம்பதியை கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், 119 தொலைபேசி இலக்கத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (14) விசாரணை நடத்தப்பட்டது.
அதன்படி நேற்று இரவு கந்தானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லிப்டன் வீதி, நாகொடை பகுதியில் வைத்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கந்தானை, நாகொடை பிரதேசத்தில் வசிக்கும் 36 வயதுடைய தம்பதியரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் தாக்குதலுக்கு உள்ளான யுவதியின் நெருங்கிய உறவினர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேகநபாரான கணவனும் மனைவியும் ஆணியகந்த பிரதேசத்தில் இணையம் மூலம் பொருட்களை வர்த்தகம் செய்யும் தொழிலை நடத்தி வந்துள்ளதுடன், தாக்குதலுக்கு உள்ளான யுவதி சுமார் 3 வருடங்களாக அவர்களின் வீட்டில் தங்கி சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்கள் யுவதியின் உறவினர்கள் என்பதாலேயே, தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யவில்லை எனவும், சம்பவம் தொடர்பான காணொளி சமூகவலைத்தளங்களில் வெளியாகியதையடுத்து பொலிஸில் முறைப்பாடு செய்ய தீர்மானித்ததாகவும் தாக்குதலுக்கு உள்ளான யுவதி தெரிவித்துள்ளார்.