யாழ்ப்பாணம், காங்கேசன்துறையில் அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி மாளிகையின் வளாகத்தை இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு (SLIIT) குத்தகைக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதியின் தலைமை அதிகாரியும், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகருமான சாகல ரத்நாயக்க தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
காங்கேசன்துறையில் அமைந்துள்ள இந்த வளாகம் 29 ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்டுள்ளது, அதில் 12 ஏக்கரில் கட்டிடத் தொகுதிகள் அமைந்துள்ளன. இந்த நிலப்பரப்பில் 12 ஏக்கர் நிலம் அரசுக்கு சொந்தமானது என கூறப்பட்டுள்ளது. எஞ்சியவை இராணுவ நடவடிக்கையின் மூலம் தமிழ் மக்களிடமிருந்து பறிக்கப்பட்டவை.
தற்போது, இந்தக் காணி கடற்படையின் கட்டுப்பாட்டில் உள்ளதுடன், உரிய குத்தகை ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டதன் பின்னர், குறித்த வளாகம் இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவகத்திற்கு விடுவிக்கப்படும்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் காலத்தில், பொதுமக்கள் நிதியை வீண் விரயம் செய்து, பொதுமக்கள் காணியில் இந்த பங்களா தொகுதி அமைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.