தெல்தோட்டை பிரதேசத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பாடசாலை
மாணவனின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
தெல்தோட்டை லிட்டில் வெலி பகுதியில் வசிக்கும் 10 வயதுடைய பாடசாலை மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நேற்று முன்தினம் (11) மதியம் புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்பில் கலந்து கொண்டுவிட்டு, மாணவன் வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே இவ்வனர்த்தம்
இடம்பெற்றுள்ளது.
காண்டீபன் திவான் என்ற மாணவனே உயிரிழந்தார்.
அப்பகுதியில் பெய்த கனமழையால், மாணவனின் வீட்டிற்கு செல்லும்
வழியில் உள்ள கால்வாயில் உள்ள பாதுகாப்பற்ற பாலத்தை கடக்க முயன்ற போது வெள்ளத்தில் சிக்கி அடித்து செல்லப்பட்டார்.
அன்று இரவு வரை கலஹா பொலிஸாரும் பிரதேசவாசிகளும் இணைந்து பாடசாலை
மாணவனை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
எவ்வாறாயினும், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இடத்திலிருந்து சுமார் 3 கிலோமீற்றர் தொலைவில் உள்ள இடத்தில் நேற்று காலை பாடசாலை மாணவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சுதுவெல்ல கிராமசேவைக்குட்பட்ட இந்த கால்வாயின் குறுக்கே நான்கு மின்கம்பங்களைப் பயன்படுத்தி கிராம மக்களால் கட்டப்பட்ட சிறிய பாலம் உள்ளது.
இரு புறமும் பாதுகாப்பு இல்லாத இந்த பாலத்தின் மீது சிறுவர்கள் உள்ளிட்ட கிராம மக்கள்
கடந்து செல்வது மிகவும் ஆபத்தான பயணம் என்கின்றனர்.