மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த துணைத் தலைவருமான பொன்.செல்வராசா இன்று (13) சுகயீனம் காரணமாக காலமானார்.
இறக்கும் போது அவருக்கு வயது 77.
நீண்டகாலமாக சிறுநீரக பாதிப்பு, நீரிழிவு நோய்களால் பாதிக்கப்பட்டிருந்த அவர், கடந்த 3 நாட்களாக மட்டக்கப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இன்று காலையில் காலமானார்.
அவரது இறுதிச்சடங்குகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறும்.
பொன் செல்வராசா தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 1994 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, நாடாளுமன்றத்திற்குத் தெரிவானார். 2000 ஆம் ஆண்டுத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
2001 ஆம் ஆண்டில் தமிழர் விடுதலைக் கூட்டணி, அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம் ஆகியன இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (ததேகூ) என்ற அரசியல் கூட்டணியை நிறுவினர்.
ததேகூ சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில், 2010 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் நாடாளுமன்றம் சென்றார்.