ஈரானில் பெண்களின் ஒடுக்குமுறைக்கு எதிராகவும், மனித உரிமைகள் – சுதந்திரத்துக்காவும் போராடியதற்காக ஈரானைச் சேர்ந்த சமூக செயல்பாட்டாளர் நர்கிஸ் முகம்மதிக்கு 2023ஆம் ஆண்டுக்கான அமைதிகான நோபல் பரிசு வழங்கப்படுவதாக ரோயல் ஸ்வீடிஷ் அகாடமி அறிவித்துள்ளது.
51 வயதான நர்கேஸ் முகமதி, தற்போது தெஹ்ரானில் உள்ள எவின் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் எழுத்தாளர், மனித உரிமை ஆர்வலர் மற்றும் மனித உரிமைகள் மையத்தின் (DHRC) துணை இயக்குநராக உள்ளார்.
முகமதி தற்போது 12 ஆண்டுகள் பல தண்டனைகளை அனுபவித்து வருகிறார், மிக சமீபத்தில் “அரசுக்கு எதிரான பிரச்சாரத்தை பரப்பியதற்காக”, மேலும் 154 கசையடிகள் தண்டனையும் வழங்கப்பட்டன.
முகமதி கடந்த தசாப்தங்களாக ஈரானில் மரண தண்டனையை ஒழிப்பதற்கும், பெண்களின் உரிமைகளுக்காகவும் பிரச்சாரம் செய்து வருகிறார்.
2022 ஆம் ஆண்டில், அவர் எட்டு ஆண்டுகள் மற்றும் 70 கசையடிகள் தண்டனைக்கு முன் ஐந்து நிமிடங்கள் மட்டுமே விசாரிக்கப்பட்டார்.
அமைதிக்கான நோபல் பரிசை வெல்லும் 19வது பெண்மணி முகமதி ஆவார்.
கடந்த 2022ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு, பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த மனித உரிமை போராளி அலெஸ் பியாலியாட்ஸ்கியுடன், ரஷ்யாவின் மனித உரிமைகள் அமைப்பான மெமோரியல் மற்றும் உக்ரைனின் மனித உரிமைகள் அமைப்பான சென்டர் பஃர் சிவில் லிபர்ட்டீஸ் ஆகியவற்றுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.
இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு ஒக்ரோபர் 2ஆம் திகதி முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதுவரை மருத்துவம், இயற்பியல்,வேதியியல் ஆகிய துறைகளுக்கான பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கடந்த 1896 ஆம் ஆண்டு மறைந்த ஸ்வீடனைச் சேர்ந்த விஞ்ஞானி ஆல்பிரட் நோபலின் உயிலின்படி பெறப்பட்ட 11 மில்லியன் ஸ்வீடிஸ் குரோனார் (1 மில்லியன் டொலர்) பரிசுத் தொகையைக் கொண்டது. இந்தாண்டு ஸ்வீடிஸ் குரோனார்களின் மதிப்பு வீழ்ச்சியடைந்தைத் தொடர்ந்து பரிசுத்தொகை 1 மில்லியன் குரோனார்கள் உயர்த்தப்பட்டுள்ளன. ஆல்பரட் நோபலின் நினைவு தினமான டிசம்பர் 10 ஆம் திகதி நடைபெறும் விழாவில் தேர்வு பெற்றவர்கள் பரிசு பெற அழைக்கப்படுவார்கள். இதில் நோபலின் விருப்பப்படி, அமைதிக்கான பரிசு மட்டும் ஒஸ்லோவில் வைத்து வழங்கப்படுகிறது. மற்ற பரிசுகள் ஸ்டாக்ஹோமில் வைத்து நடைபெறும் விழாவில் வழங்கப்படுகின்றன.