தெற்கு டெல்லி போகல் பகுதியில் உம்ராவ் ஜுவல்லர்ஸ் என்ற நகைக் கடை உள்ளது. இந்தக் கடையை அதன் உரிமையாளர் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை வழக்கம்போல் பூட்டிவிட்டுச் சென்றார்.
திங்கட்கிழமை வார விடுமுறை என்பதால் நேற்று காலையில் கடையை திறந்தார். அப்போது ஷோரூம் மற்றும் லாக்கர் அறையில் இருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
தகவலின் பேரில் போலீஸார் அங்கு விரைந்து வந்தனர். தடயவியல் நிபுணர்கள் அழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.
நான்கு மாடிகள் கொண்ட நகைக்கடை கட்டிடத்தின் மேல்தளத்தில் இருந்து கொள்ளையர்கள் உள்ளே புகுந்துள்ளனர். பிறகு தரை தளத்தில் இருந்த லாக்கர் அறையில் துளையிட்டு அங்கிருந்த நகைகளை கொள்ளையடித்தனர்.
இதையடுத்து ஷோரூமில் இருந்து நகைகளையும் அள்ளிச் சென்றுள்ளனர். கொள்ளை போன நகைகளின் மதிப்பு சுமார் ரூ.25 கோடி ஆகும்.
கொள்ளையை கச்சிதமாக திட்டமிட்டிருந்த கொள்ளையர்கள் கண்காணிப்பு கேமராக்களை முன்கூட்டியே துண்டித்து விட்டனர். இதனால் கொள்ளையர்களை அடையாளம் காண முடியாமல் போலீஸார் திணறி வருகின்றனர். இது தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.