அரசாங்கத்தின் வருவாய் பற்றாக்குறை தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் கவலை வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் நேற்று (26) இடம்பெற்ற கலந்துரையாடலில் இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதாக அரசாங்க தகவல் தரப்புக்களை மேற்கோள்காட்டி ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் வழங்கப்பட்ட முதற்கட்ட கடன் வழங்கல் தொடர்பான மீளாய்வு வேலைத்திட்டத்தின் இறுதிச்சுற்று கலந்துரையாடல் நேற்று (26) இடம்பெற்றது.
சர்வதேச நாணய நிதியத்தின் பல நிபந்தனைகளை இலங்கை அரசாங்கம் பூர்த்தி செய்துள்ளதாகவும், உள்ளுர் கடன் மறுசீரமைப்பின் முன்னேற்றம் தொடர்பில் பிரதிநிதிகளால் பாராட்டப்பட்டுள்ளதாகவும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், அரசாங்கத்தின் இந்த வருட வருமானப் பற்றாக்குறை குறித்து சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் கவலை வெளியிட்டதுடன், எதிர்கால நடவடிக்கைகள் குறித்து சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை அலுவலகத்துடன் கலந்துரையாடி தீர்மானம் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இதேவேளை, இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள், கடந்த சில நாட்களாக மேற்கொள்ளப்பட்ட மீளாய்வு தொடர்பான முடிவுகளை இன்று ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி அறிவிக்க திட்டமிட்டுள்ளனர்.
இலங்கை மத்திய வங்கி வளாகத்தில் நடைபெறும் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான சிரேஷ்ட தூதுக்குழு தலைவர் பீட்டர் ப்ரூவர் கலந்துகொள்ள உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.