நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள முறைப்பாடுகளை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 27ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (27) தீர்மானித்துள்ளது.
இந்த மனுக்கள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் சமத் மொராயஸ் ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இன்று அழைக்கப்பட்டது.
அப்போது, பிரதிவாதியான சனத் நிஷாந்தவும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்.
இந்த முறைப்பாடுகள் தொடர்பில் சாட்சியங்கள் கட்டளைச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட அறிவித்தலின் பிரகாரம் பிரதிவாதிகளுக்கு சாட்சியங்களை ஆராய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பான அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மினி கிரிஹாகம நீதிமன்றில் தெரிவித்தார்.
இதன்படி, முறைப்பாடு தொடர்பான விசாரணைக்கு திகதியை நிர்ணயிக்குமாறு பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றில் கோரினார்.
அதன்படி, மேன்முறையீட்டு நீதிமன்றம் இது தொடர்பான முறைப்பாடுகளை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 27ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் திகதியை நிர்ணயித்துள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது சனத் நிஷாந்தவிற்கு எதிராக நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் இந்த மூன்று முறைப்பாடுகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.
இலங்கை நீதித்துறை அதிகாரிகள் சங்கம், சட்டத்தரணிகளான பிரியலால் சிறிசேன மற்றும் விஜித குமார ஆகியோர் இந்த முறைப்பாடுகளை முன்வைத்தனர்.