24 வயது பட்டதாரி பெண்ணை கரம் கரம்பிடித்த 54 வயது தொழிலாளி, பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ள சம்பவம் வைரலாகி வருகிறது.
சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த தாரமங்கலம் அருகே மாட்டையாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் விசைத்தறி தொழிலாளி கிருஷ்ணன். வயது 54. இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வருவதாக தெரிகிறது.
இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த பட்டதாரி பெண் விமலா (வயது 24) என்பவர் விசைத்தறி தொழிலாளி கிருஷ்ணனின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். இதில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் பின்னர் காதலாக மலர்ந்துள்ளது.
இருவரும் காதலித்து வந்த நிலையில் ஒரு கட்டத்தில் திருமணம் செய்ய முடிவெடுத்து வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். அதன் பிறகு திருவண்ணாமலைக்கு சென்று, அங்கு வைத்து பட்டதாரி பெண் விமலாவிற்கு விசைத்தறி தொழிலாளி கிருஷ்ணன் தாலி கட்டி திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இந்த திருமணம் குறித்து தகவல் அறிந்த விமலாவின் தந்தை அய்யம்பெருமாள், தனது மகளை கிருஷ்ணன் கடத்திச் சென்றதாக தாரமங்கலம் காவல் நிலையத்தில் புகாரளித்த நிலையில், தந்தையின் புகாரை அடுத்து, போலீசார் இருவரையும் தேடி வந்துள்ளனர்.
இத்தகவல் அறிந்த விமலா- கிருஷ்ணன் தம்பதி பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
அங்கு விமலாவின் உறவினர்கள் மற்றும் பெற்றோர் அவரை தங்களுடன் திரும்பி வர கட்டாயப்படுத்தி நிலையில் அவர் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
மேலும் இருவரும் மேஜர் என்பதாலும் இளம்பெண் விமலா தனது காதல் கணவருடன் செல்வதாக போலீசாரிடம் கூறியதாலும் அவரது விருப்பப்படி கணவர் கிருஷ்ணனுடன் விமலாவை காவல்துறையினரும் அனுப்பி வைத்தனர்.