விஜயலட்சுமி அளித்துள்ள பாலியல் புகாரில் உண்மையில்லை என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
காவல்துறையினர் முன்பு தாம் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும் போது என்னுடன் விஜயலட்சுமி, வீரலட்சுமியையும் நேரில் காவல்துறை விசாரிக்க வேண்டும் என்றும் சீமான் மனு அளித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி காவல்துறையில் பாலியல் புகார் அளித்திருந்தார். இதன்பின்னர் சீமான் மீது பல்வேறு புகார்களை வீடியோ பதிவுகள் மூலம் கூறி வந்தார் விஜயலட்சுமி.
சென்னையில் தங்கி இருந்த போது தற்கொலைக்கும் விஜயலட்சுமி முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
பின்னர் தமிழ்நாட்டில் இருந்து பெங்களூர் சென்ற விஜயலட்சுமி, சீமானை பழிவாங்குவதாக வீடியோ பதிவிட்டு வந்தார். இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் இறுதியில் மீண்டும் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சீமான் மீது விஜயலட்சுமி புகார் கொடுத்தார்.
இப்புகாரின் அடிப்படையில் விஜயலட்சுமியிடம் 8 மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது சீமான் 7 முறை கட்டாய கருக்கலைப்பு செய்தார் எனவும் விஜயலட்சுமி குற்றம்சாட்டினார்.
இதனை தொடர்ந்து விஜயலட்சுமியிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். கோயம்பேடு துணை ஆணையர் உமையாள், நடிகை விஜயலட்சுமியிடம் ராமாபுரம் போலீஸ் நிலையத்தில் வைத்து பல மணி நேரம் விசாரணை செய்தார்.
பின்னர் திருவள்ளூரில் உள்ள மகளிர் நீதிமன்ற மாஜிஸ்திரேட் முன்பு நடிகை விஜயலட்சுமி ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். அப்போது பலமுறை கருக்கலைப்பு செய்ததாக விஜயலட்சுமி தெரிவித்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு நடிகை விஜயலட்சுமிக்கு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
இதனையடுத்து சீமான் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சென்னை வளசரவாக்கம் போலீசார் முதல் சம்மன் அனுப்பி இருந்தனர்.
அப்போது, கட்சிப் பணிகள் அதிகமாக இருப்பதால் தமக்கு ஆஜராக நேரம் இல்லை என கூறியிருந்தார். பின்னர் சீமான் தரப்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகி, அவர் கொடுத்த கடிதங்களை வழங்கினர். அதில், தம் மீதான புகார்கள் குறித்து விளக்கம் கொடுத்தால் ஆஜராக தயார் என சீமான் தெரிவித்திருந்தார்.
நடிகை விஜயலட்சுமி சீமானுக்கு எதிராக சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவேன் என வீடியோ பதில் எச்சரிக்கை விடுத்திருந்தார். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது புகார் அளித்துள்ள நடிகை விஜயலட்சுமிக்கு பாதுகாப்பு அளிக்க கோரி தமிழர் முன்னேற்றப் படை தலைவர் வீரலட்சுமி கோயம்பேடு துணை ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தார். நாம் தமிழர் கட்சியினர் தினந்தோரும் வாட்ஸ் அப்களில் அசிங்க அசிங்கமாக பேசி எனக்கு அனுப்புகிறார்கள் என்றும் புகார் அளித்திருந்தார்.
இந்நிலையில், சென்னை வளசரவாக்கம் போலீஸார், விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு சீமானுக்கு இரண்டாவது முறையாக சம்மன் அனுப்பியுள்ளனர். இது தொடர்பான சம்மனை வழங்குவதற்காக சீமானின் வீட்டிற்கு நேரில் சென்று மனு அளித்தனர்.
காவல்துறையினர் அளித்த சம்மனை வாங்க சீமான் மறுத்து விட்டார். சீமான் கலந்தாய்வு கூட்டத்தில் கலந்த கொள்ள இருப்பதால் நேரில் ஆஜராக முடியும், அவர்கள் காவல் நிலையத்திற்கு வந்து சம்மனை பெற்றுக்கொண்டு மற்றொரு தேதியில் நேரில் ஆஜராகுவார் எனவும் அவரது தரப்பில் கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இதனிடையே நடிகை விஜயலட்சுமி மீது மானநஷ்ட வழக்கு தொடர சீமான் தரப்பு முடிவு என தகவல்கள் வெளியான நிலையில் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
தான் நேரில் ஆஜராகும் போது புகார் அளித்துள்ள விஜயலட்சுமி, வீரலட்சுமி ஆகியோர் தன்னுடன் காவல்நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த மனுவை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் சீமானின் வழக்கறிஞர் கொடுத்துள்ளார்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய சீமான் வழக்கறிஞர், “நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மீது புகாரித்துள்ளார் நடிகை விஜயலட்சுமி, விஜயலட்சுயின் புகாரின் பேரில் சீமான் ஆஜராக காவல்துறை சம்மன் அளித்துள்ளது. நடிகை விஜயலட்சுமி, வீரலட்சுமி கூறும் குற்றச்சாட்டில் உண்மையில்லை. கட்சி நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் உள்ளதால் சீமான் மனு அளித்துள்ளார். சீமான் மீது குற்றச்சாட்டு கூறியவர்களையும் நேரில் அழைக்க வேண்டும். என்னுடன் விஜயலட்சுமி, வீரலட்சுமியையும் நேரில் காவல்துறை விசாரிக்க வேண்டும். 12 ஆண்டுகள் சீமான் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த நீதிமன்றத்தில் அனுமதி பெறப்பட்டுள்ளதா? என காவல்துறையிடம் விளக்கம் கேட்டோம். ஆனால் அவர்கள் எந்தவித விளக்கமும் எங்களுக்கு கொடுக்கவில்லை என்று கூறினார்.