முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீண்டும் அரசியலுக்கு வருவது ஒரு நகைச்சுவை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்தார்.
பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே எஸ். எம்.சந்திரசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கோத்தபாய ராஜபக்சவுக்கு 69 இலட்சம் மக்கள் வாக்களித்தனர். ஜனாதிபதியாக தெரிவான போதிலும், தன்னால் பொறுப்புக்களை நிறைவேற்ற முடியாமல் ஓடிப்போய்விட்டு, மீண்டும் மீண்டும் அரசியலுக்கு வருவது என்பது வேடிக்கையானது என்றார்.
மக்களை கொல்ல விடாமல் பதவியை விட்டு விலகிச் சென்றவர், மீண்டும் அரசியலுக்கு வருவார் என்று நினைக்கவில்லை என்று கூறிய சந்திரசேன, பதவியை துறந்தவர் என்றளவில் அவருக்கு மரியாதை இருப்பதாகவும் தெரிவித்தார்.
மீண்டும் அரசியலுக்கு வர தயாராகிவிட்டார் என்கிறார்கள். அது நடக்குமா என்பது தெளிவாகத் தெரியவில்லை, பாதுகாப்பு மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகங்களின் செயலாளராக அவர் பொறுப்பு.க்களை சரியாக செய்தார். ஆனால், ஜனாதிபதி பதவிக்கான கடமைகளை அவரால் நிறைவேற்ற முடியாமல் போனதாக சந்திரசேன குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் கோத்தபாய ராஜபக்ச மீண்டும் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவார் என கூறுவது கனவாகவே காணப்படுவதாகவும், ஜனாதிபதி பதவியை நிர்வகிக்க முடியாமல் விலகிய கோத்தபாய ராஜபக்ஷ, வேறு சிறிய கட்சியில் இருந்து போட்டியிட்டு வெற்றியடைவார் என தான் நம்பவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.