மதுபோதையில் இரவுநேரம் அநுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்று, தமிழ் அரசியல் கைதிகளில் தலையில் கைத்துப்பாக்கியை வைத்து கொலைமிரட்டல் விடுத்த, அப்போதைய சிறைச்சாலைகள் மற்றும் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் லொஹான் எவிந்த ரத்வத்தவை இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு அனுராதபுரம் பிரதான நீதவான் மற்றும் மேலதிக மாவட்ட நீதிபதி நாலக சஞ்சீவ ஜயசூரிய இன்று உத்தரவிட்டுள்ளார்.
சந்தேகநபரான தற்போதைய பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தைக்கு எதிரான வழக்கை 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 4 ஆம் திகதி முதல் முறையாக விசாரிக்க தீர்மானித்த பிரதான நீதவான், சந்தேகத்திற்குரிய இராஜாங்க அமைச்சரை அன்றைய தினம் மீண்டும் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு மேலும் உத்தரவிட்டார்.
இதேவேளை, இந்த வழக்கின் முதலாவது சாட்சியான பூபாலசிங்கன் சூரியபாலன் மற்றும் இரண்டாவது சாட்சியான மணியரசன் சுலக்ஷன் ஆகியோரை அன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலையாகி வழக்கு தொடர்பான சாட்சிகளை வழங்குமாறு மேலும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல்கைதியான பூபாலசிங்கன் சூரியபாலனின் தலையில் துப்பாக்கியை வைத்து கொலைமிரட்டல் விடுத்ததாக, கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் தாக்கல் செய்த வழக்கை, அனுராதபுரம் பிரதான நீதவான் நாலக சஞ்சீவ ஜயசூரிய இன்று விசாரணைக்கு எடுத்தார்.
நீதிமன்றம் வழங்கிய முன்னைய உத்தரவின் பிரகாரம், சந்தேகத்திற்குரிய இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த இன்று முதல் தடவையாக திறந்த நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார். இங்கு, சந்தேகநபரான இராஜாங்க அமைச்சருக்கு எதிரான குற்றச்சாட்டை நீதிமன்றம் வாசித்த பின்னர், சந்தேகநபரான இராஜாங்க அமைச்சர் அனைத்து குற்றச்சாட்டுக்களிலும் தான் நிரபராதி என தனது சட்டத்தரணியான ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மென்ட்ஸ் ஊடாக நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றப்பிரிவு தனது ஆரம்ப சமர்ப்பணங்களில் அனுராதபுரம் பிரதான நீதவான் நாலக சஞ்சீவ ஜயசூரியவிடம் தெரிவித்தது: 2021 செப்டெம்பர் மாதம் 12ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த நாட்களில் சந்தேகநபர் (முன்னாள் சிறைச்சாலைகள் மற்றும் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் லொஹான் எவிந்த ரத்வத்த) அநுராதபுரம் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த கைதிகளில் ஒருவரான பூபாலசிங்கன் சூரியபாலன் நோக்கி துப்பாக்கியை காட்டி மிரட்டி, விரும்பினால் சுட்டுக்கொல்ல முடியுமென கிரிமினல் மிரட்டல் விடுத்தமைக்கான போதிய ஆதாரங்கள் இலங்கை குற்றவியல் சட்டத்தின் 183 ஆவது பிரிவின்படி கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என என்று சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்
இதன்படி, சட்டமா அதிபரின் பணிப்புரையின் பிரகாரம் இலங்கை குற்றவியல் சட்டத்தின் 486ஆவது பிரிவின் கீழ் சந்தேகநபரான லொஹான் எவிந்த ரத்வத்தவிற்கு எதிராக இந்த நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளது.
அநுராதபுரம் சிறைச்சாலையில் கடமையாற்றிய சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் மற்றும் அன்றைய தினம் அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகள் உட்பட 14 பேர் இந்த வழக்கில் சாட்சிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.