இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களை மையப்படுத்திய, உள்ளடக்கிய, பக்கச்சார்பற்ற, வெளிப்படையான மற்றும் சுதந்திரமான நல்லிணக்க முயற்சிகளுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது.
மனித உரிமைகள் பேரவையின் 54வது அமர்வில் ஜெனிவாவிலுள்ள ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதுவர் கெல்லி பில்லிங்ஸ்லி, மனித உரிமைகள் பேரவையின் இலங்கை மீதான கவனத்தை அமெரிக்கா பாராட்டுவதாக தெரிவித்தார்.
“அது அதன் பொருளாதார மீட்சியை வழிநடத்தும் போது, ஊழலுக்கு எதிரான சட்டம் உட்பட இலங்கையின் பலப்படுத்தப்பட்ட சீர்திருத்தங்களை நாங்கள் அங்கீகரிக்கிறோம். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள 100க்கும் மேற்பட்ட நபர்களை அரசாங்கம் பிணையில் விடுவித்ததையும் நாங்கள் வரவேற்கிறோம், ”என்று அவர் கூறினார்.
அமெரிக்கத் தூதுவர் காணி விடுவிப்பில் ஆரம்ப முன்னேற்றத்தைப் பாராட்டினார்.
“சிறுபான்மை சமூகங்களில் உள்ள மதத் தலங்களில் ஏற்படும் பதட்டங்கள், சிவில் சமூகத்தின் மீதான அரசாங்க அழுத்தம் மற்றும் 2018 முதல் உள்ளாட்சித் தேர்தல்கள் இல்லாதது குறித்து நாங்கள் கவலைப்படுகிறோம். பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை இறுதி செய்வதில் சர்வதேச சிறந்த நடைமுறைகள், அர்த்தமுள்ள ஆலோசனைகளை நாங்கள் ஊக்குவிக்கிறோம்” என்று தூதர் கூறினார்.
நிலைமாறுகால நீதி நிறுவனங்கள் நம்பகத்தன்மையுடனும் வினைத்திறனுடனும் இயங்குவதை உறுதிப்படுத்துமாறு இலங்கையை பில்லிங்ஸ்லி வலியுறுத்தினார்.
“கருத்து சுதந்திரம் மற்றும் அமைதியான போராட்டங்களை உறுதி செய்யும் அரசாங்கங்கள் அதிக அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை அனுபவிக்கின்றன” என்று அவர் மேலும் கூறினார்.