நடனக் கலைஞரான (Bar Dancer) 30 வயதுப் பெண்ணுடன் திருமணம் மீறிய உறவில் இருந்த ராணுவ அதிகாரியொருவர், அந்தப் பெண்ணைக் கொலைசெய்த சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.
இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸார் தரப்பில் வெளியான தகவலின்படி, கொலைசெய்யப்பட்ட பெண் ஸ்ரேயா ஷர்மா நேபாளத்தைச் சேர்ந்தவர் என்றும், கொலைசெய்த ராணுவ அதிகாரி ராமேந்திர உபாத்யாயா (42) ராணுவத்தில் லெப்டினன்ட் கர்னலாக பணியாற்றி வந்திருக்கிறார் என்றும் தெரியவந்திருக்கிறது.
ராமேந்திர உபாத்யாயாவுக்கு ஏற்கெனவே திருமணமும் ஆகி, ஒன்றரை வயது மகனுள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியிலுள்ள டான்ஸ் பாரில் ஷ்ரேயா ஷர்மாவை ராமேந்திர உபாத்யாயா சந்தித்திருக்கிறார். பின்னர் நண்பர்களாகப் பழகிவந்த இருவரும், காலப்போக்கில் ஒன்றாகச் சேர்ந்து வாழ ஆரம்பித்தனர்.
ஒருகட்டத்தில், பணியிட மாற்றம் ஏற்பட்டு டேராடூனுக்குச் சென்ற ராமேந்திர உபாத்யாயா, ஷ்ரேயா ஷர்மாவையும் தன்னுடன் அழைத்துக்கொண்டு அங்கு தனி பிளாட் ஒன்றில் அவரை வாடகைக்கு தங்கவைத்தார். செலவுக்கும் பணம் கேட்டு வந்துள்ளார்.
இதற்கிடையில், தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு ராமேந்திர உபாத்யாயாவிடம் ஷ்ரேயா ஷர்மா கூறிவந்திருக்கிறார். இந்த விவகாரம் ராமேந்திர உபாத்யாயாவின் மனைவிக்குத் தெரியவரவே, ஷ்ரேயா ஷர்மா சிலிகுரிக்கே அனுப்பிவைத்து வாடகை வீட்டில் தங்கவைத்தார்.
அதைத் தொடர்ந்து தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு ஷ்ரேயா ஷர்மா மீண்டும் கூறியிருக்கிறார். இதனால் எரிச்சலடைந்த ராமேந்திர உபாத்யாயா, ஷ்ரேயா ஷர்மாவைக் கொலைசெய்ய திட்டமிட்டார்.
அதன்படி கடந்த சனிக்கிழமையன்று ராஜ்பூர் சாலையிலுள்ள ஒரு மதுக்கடைக்கு ஷ்ரேயா ஷர்மாவை அழைத்துச் சென்ற ராமேந்திர உபாத்யாயா, அவரை நன்கு குடிக்க வைத்திருக்கிறார். ராமேந்திர உபாத்யாயா குறைந்தளவு குடித்து சுயநினைவுடன் இருந்துள்ளார்.
பின்னர், ஷ்ரேயா ஷர்மாவை காரில் ஏற்றிக்கொண்டு தானோ சாலையில் சென்றுகொண்டிருந்த ராமேந்திர உபாத்யாயா, மீண்டும் ஷ்ரேயாவுக்கு பியர் கொடுத்தார். உடலுறவு கொள்வோம் என ஷ்ரேயா கேட்டுள்ளார். இதற்குள் பாத்ரூம் கிளீனரையும் ஷ்ரேயாவின் வாய்க்குள் ஊற்றியுள்ளார்.
அந்த பாதை ஒரு இடத்தில் முடிந்ததையடுத்து, காரை திருப்பிய உபாத்யாயா, பின்னர் காரிலிருந்து இறங்கி, பின்பக்கமிருந்த சுட்டியலை எடுத்து வந்து, ஷர்மாவின் பின்பக்கமிருந்து தலையில் பயங்கரமாகத் தாக்கினார். போதையிலிருந்த ஷ்ரேயாவால் தன்னை தற்காத்துக் கொள்ள முடியவில்லை.
அதையடுத்து ஷ்ரேயா ஷர்மா இறந்த பிறகு, உடலை அங்கேயே சாலையோரமாக வீசிவிட்டுச் சென்றுவிட்டார். பின்னர் அடுத்தநாள் காலை 7 மணியளவில், தானோ சாலையில் ஒரு சடலம் கிடப்பதாக ராய்ப்பூர் காவல் நிலைய அதிகாரிக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. அதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார் உடலை மீட்டு, இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 302-ன் கீழ் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவந்தனர். இந்த நிலையில், சம்பந்தப்பட்ட ராணுவ அதிகாரி ராமேந்திர உபாத்யாயாவை போலீஸார் நேற்று கைதுசெய்தனர்.