சாதி மாறி திருமணம் செய்த தனது மகளின் திருமணத்தை, ஆந்திர எம்எல்ஏ நடத்தி முடித்துள்ளார்.
ஆந்திர மாநிலம் ஆளும் கட்சி எம்எல்ஏ சிவப்பிரசாத் ரெட்டி. இவரது மூத்த மகள் பல்லவி (24). இவர் தன்னுடன் படித்த கோபி பவன்குமார் (25) என்பவரை காதலித்து வந்தார்.
கோபி பவன்குமார் ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர். அவரது தந்தை மெக்கானிக்காக பணிபுரிகிறார்.
இவர்களது சாதி வேறு வேறு என்றாலும், இவர்களது திருமணத்திற்கு எம்எல்ஏ எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் அவரது மனைவி- மணமகளின் தாய்- திருமணத்துக்கு உடன்படவில்லை.
என்றாலும் எம்எல்ஏ சிவப்பிரசாத் ரெட்டி தனது மகள் மீதான பாசம் காரணமாக திருமணத்திற்கு சம்மதித்தார்.
இந்நிலையில் பவன் – பல்லவியின் திருமணம் நேற்று காலை பொல்லாவரம் பகுதியில் உள்ள வெங்கடேச பெருமாள் கோயிலில் நடைபெற்றது. இதில் மணமகளின் தந்தை மாத்திரம் கலந்து கொண்டார்.
இது குறித்து எம்எல்ஏ சிவபிரசாத் ரெட்டி கூறியதாவது: எம்பிஏ படித்துக் கொண்டிருந்த போது தனது மகள் பவன்குமாரை காதலித்ததாகவும், மகளின் விருப்பப்படி காதல் திருமணம் செய்து கொண்டதாக கூறினார்.
தனது மகள் விரும்பிய பையனை திருமணம் செய்து கொண்டதில் திருப்தி அடைவதாகவும் விளக்கம் அளித்துள்ளார். உண்மையில், இந்த திருமணத்தை பிரம்மாண்டமாக நடத்த விரும்புவதாகவும், ஆனால் இதற்கு தனது மனைவி சம்மதிக்காததால், அடக்கமாக நடத்துவதாகவும் எம்எல்ஏ கூறினார்.
