இலங்கையில் 2023 இன் இரண்டாவது காலாண்டில் எச்.ஐ.வி/எயிட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டின் பின்னர், ஒரு காலாண்டில் அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் பதிவாகியுள்ள சந்தர்ப்பம் இதுவாகும்.
தேசிய STD/AIDS கட்டுப்பாட்டுத் திட்டத்தின்படி, இலங்கையில் ஏப்ரல் முதல் ஜூன் வரையான இரண்டாவது காலாண்டில் 181 புதிய எச்.ஐ.வி தொற்றுக்கள் பதிவாகியுள்ளன. 2022 இல் 165 தொற்றுக்கள் பதிவாகிய முந்தைய காலாண்டுடன் ஒப்பிடும்போது ஒன்பது சதவீத அதிகரிப்பைப் பிரதிபலிக்கிறது.
2023 இரண்டாவது காலாண்டில் பதிவான தொற்றாளர்களில் 26 ஆண்களும், 3 பெண்களும் 15-24 வயதுக்கு உட்பட்டவர்கள். ஏனையவர்கள் 25 வயதுக்கு மேற்பட்ட நபர்கள்.
2023 இல் பதிவாகியுள்ள எச்.ஐ.வி தொற்றுகளின் ஆண் மற்றும் பெண் விகிதம் 8.1:1 ஆக உள்ளது.
அத்துடன், இரண்டாவது காலாண்டில் எச்.ஐ.வி/எய்ட்ஸ் தொடர்பான 13 இறப்புகள் பதிவாகியுள்ளன.
இதேவேளை, இலங்கையில் உத்தியோகபூர்வமாக திருநங்கைகள் மத்தியில் 10 எச்.ஐ.வி வழக்குகள் பதிவாகியுள்ளன, 2009 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை மொத்தம் 3,968 ஆண்களும் 1,379 பெண்களும் எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.