பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட பீடாதிபதிக்கு பொலிஸ் அதிகாரியை போல போலி தொலைபேசி அழைப்பு விடுத்த மாணவர் சங்கத் தலைவர் ஒருவருக்கு எதிராக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட பீடாதிபதி முறைப்பாடு செய்துள்ளதாக பேராதனை பொலிஸார் தெரிவித்தனர்.
பிரதிப் பொலிஸ் மா அதிபர் என தன்னை குறிப்பிட்டு, கலைப்பீடாதிபதியை விசாரணைக்காக பொலிஸ் தலைமையகத்திற்கு வருமாறு அந்த தொலைபேசி அழைப்பில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 20ஆம் திகதி, பேராதனை பல்கலைகழகத்துக்கு தொலைபேசியில் அழைப்பேற்படுத்தி, பொலிஸ் தலைமையத்திலிருந்து பேசுவதாக குறிப்பிட்டு, கலைப்பீடாதிபதியின் தொலைபேசி இலக்கத்தை அந்த மாணவர் பெற்றுள்ளார்.
மறுநாள், கலைப்பீடாதிபதியின் தொலைபேசிக்கு 5 முறை அழைப்பு ஏற்படுத்தியுள்ளார். அந்த நேரத்தில் பதிலளிக்க முடியாமலிருந்த கலைப்பீடாதிபதி, பின்னர் அந்த இலக்கத்துக்கு அழைப்பு ஏற்படுத்தியுள்ளார்.
காவல்துறை தலைமையகத்தில் பணிபுரியும் டிஐஜி ஒருவரின் பெயரை குறிப்பிட்டு, போலியாக தன்னை அறிமுகப்படுத்தியுள்ளார் மாணவர்.
பேராதனை பல்கலைக்கழக மாணவர்களை அவமதித்ததால் மாணவர்கள் மனமுடைந்து கொழும்பில் போராட்டம் நடத்தி ஜனாதிபதி செயலகத்துக்குள் நுழைய திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கு எதிராக நீதிமன்ற உத்தரவு பெறப்பட்டுள்ளது எள பிரதி பொலிஸ் மா அதிபராக பேசியவர் தெரிவித்ததாக பீடாதிபதி பொலிஸில் செய்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலைப்பீடத்திலுள்ள உள்ள அனைத்து ஆவணங்களையும் விசாரணைக்காக போலீஸ் தலைமையகத்தில் ஒப்படைக்குமாறு டிஐஜியாக நடித்தவர், கடந்த 21ம் திகதி தெரிவித்ததாக பீடாதிபதி அளித்த புகாரில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.