ரண்டிய உயன அடுக்குமாடி குடியிருப்பில் காதலியை சந்திக்கச் சென்ற இளைஞன் 10வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் தற்கொலை அல்ல, கொலையே என விசாரணை நடத்திய பொலிசார் கண்டறிந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
வீட்டுத் தொகுதியின் பத்தாவது மாடியில் உள்ள தனது காதலியின் வீட்டில் இளைஞன் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு மேல் மாடியில் இருந்து சடலம் வீசப்பட்டதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
முன்னதாக இளைஞனின் மரணம் தற்கொலை என அறிவிக்கப்பட்டதை அடுத்து அவரது சடலம் மாதம்பிட்டிய மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. நீதிமன்ற உத்தரவின் பின்னர் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை நடத்தப்படும் என சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
உயிரிழந்த 21 வயதுடைய ஜே.மதுசங்கவும், அவரது காதலியும் ஐஸ் போதைக்கு அடிமையானவர்கள் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
யுவதியின் தாய் வெளிநாட்டில் இருப்பதாகவும், ரந்திய உயன பத்தாவது மாடியில் உள்ள வீட்டில் பாட்டி, 18 வயதான தனது சகோதரியுடன் அவர் வசித்து வருவதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த பெண்களுக்கு மூத்த சகோதரி ஒருவரும் உள்ளார். அவரும் வெளிநாட்டில் பணிபுரிகிறார். அவரது 2 குழந்தைகளும் அந்த வீட்டிலேயே தங்கியுள்ளனர்.
18 வயதுடைய சகோதரி கர்ப்பமாக இருப்பதாகவும், அவரது குழந்தையின் தந்தை யார் என்று தெரியவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
தற்போது வெளிநாட்டிலுள்ள மூத்த சகோதரியுடன் முன்னர் தொடர்பு வைத்திருப்பதாகக் கூறப்படும் 26 வயதுடைய இளைஞன் ஒருவர் அடிக்கடி வீட்டுக்குச் செல்வதுடன், அவரும் போதைப்பொருளுக்கு அதிக அடிமையாக இருந்துள்ளார்.
அந்த இளைஞருடனும், 18 வயதான யுவதிக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.
கொலைச் சம்பவம் இடம்பெற்றதாகக் கூறப்படும் அன்றைய தினம் மதுசங்க இந்த வீட்டுக்குச் சென்றபோது 26 வயதுடைய இளைஞன் இருந்துள்ளார்.
இருவருக்கும் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த இளைஞன் மதுசங்கவை தாக்கி, துணியினால் கழுத்தை நெரித்து பின்னர் பத்தாவது மாடியில் இருந்து கீழே வீசியுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
முன்னதாக மதுஷங்க ஜன்னல் வழியாக குதித்ததாக காதலி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவரின் உறவினர் ஒருவர் முறைப்பாடு செய்ததை அடுத்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.
மதுஷங்க தரையில் விழுந்தபோது, அவரது கழுத்தில் துணி சுற்றப்பட்டிருந்த புகைப்படத்தை அந்த குடியிருப்பின் கீழிருந்த ஒருவர் எடுத்துள்ளார். அந்த புகைப்படத்தையும் முறைப்பாட்டாளர் பொலிசாரிடம் ஒப்படைத்திருந்தனர்.
பொலிசார் மீண்டும் சிறுமியை விசாரித்தபோது, 26 வயது இளைஞன் கழுத்தை நெரித்தது தெரியவந்தது.
இந்த சம்பவத்தை வெளியில் சொல்லக்கூடாது என்றும், சொன்னால் தன்னையும் கொன்று விடுவேன் என அந்த 26 வயதானவர் மிரட்டியதாக காதலி தெரிவித்தார்.
சந்தேக நபரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவார்கள்.