வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று திங்கட்கிழமை (21) காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
பெருந்திரளான பக்தர்களின் அரோகரா கோஷத்துக்கு மத்தியில் சிவச்சாரியார்களின் வேத மந்திரங்கள் ஒலிக்க கொடியேற்றம் இடம்பெற்றது.
பெருமளவான பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடனை நிறைவேற்றும் பொருட்டு அங்கப்பிரதட்சணம் உட்பட பல்வேறு நேர்த்திகளில் ஈடுபட்டனர்.
செங்குந்த மரபினரால் வடிவமைக்கப்பட்ட கொடிச்சீலை பாரம்பரிய முறைப்படி நேற்று வேல் மடம் ஆலயத்துக்கு எடுத்து வரப்பட்டு, அங்கு விசேட பூஜை வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் சிறிய தேரொன்றில் எடுத்து வரப்பட்டு நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் கையளிக்கப்பட்டது.
கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ள மஹோற்சவம் எதிர்வரும் செப்ரெம்பர் 14 ஆம் திகதி இடம்பெறவுள்ள தீர்த்தத் திருவிழா வரையான 25 நாள்களுக்குத் தொடர்ந்து நடைபெறவுள்ளது.