முல்லைத்தீவு குருந்தூர் மலையில் அழிக்கப்பட்ட ஆதிசிவன் ஐயனார் வழிபாட்டிடத்தில் இன்று (18) கடுமையான கட்டுப்பாடுகளின் மத்தியில் பொங்கல் நிகழ்வு நடந்து வருகிறது.
அந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரையில் பௌத்த பிக்குகளும், வாகனங்களில் அழைத்து வரப்பட்ட சிங்கள மக்களும் பிரித் ஓதி சமய அனுட்டானங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இன்றைய பொங்கல் நிகழ்வுக்கு தொல்பொருள் திணைக்களம் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. இதனை கண்காணிக்க தொல்பொருள் திணைக்கள உத்தியோகத்தர்கள் பிரசன்னமாகியிருந்தனர்.
இன்றைய பொங்கல் நிகழ்வுக்கு பௌத்த பிக்குகள், யாழில் இயங்கும் அருண் சித்தார்த் கும்பல் இடையூறு விளைவிக்கலாமென்பதால், பொங்கலுக்கு பொலிசார் தடைகோரியிருந்தனர். அத்துடன், அந்த தரப்பினர் வாலாட்ட முடியாதபடி நீதிமன்ற கட்டளையும் பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இன்றைய பொங்கல் நிகழ்வு, தொல்லியல் திணைக்களம் பிறப்பித்த கட்டுப்பாடுகளின்படி நடைபெற்றது. நிலத்தில் கல் வைத்து, அதன் மேல் தகரம் வைத்து, அதன் மேல் அடுப்பு அமைக்கப்பட்டு பொங்கப்பட்டது.
இதன்போது தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர், தனியாக பொங்கல் செய்வதற்கான ஏற்பாடுகளுடன் வந்திருந்தனர். அவர்கள் இன்னொரு அடுப்பு அமைக்க முற்பட்ட போது, தொல்பொருள் திணைக்களம் அதற்கு அனுமதியளிக்கவில்லை.
எத்தனை அடுப்பு அமைக்கலாம் என நீதிமன்ற கட்டளையெதுவும் பிறப்பிக்கப்படாத போதிலும், ஒரு அடுப்பிலேயே பொங்க தொல்லியல் திணைக்களம் அனுமதியளித்தது.
அதனால் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கும், தொல்லியல் திணைக்களத்தினருக்குமிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. பின்னர் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் அங்கிருந்து புறப்பட்டு விட்டனர்.
பொங்கல் நிகழ்வின்போது பிக்குவொருவர் சிறிய இடையூறு விளைவிக்க முயன்றார். எனினும், அவரை பொங்கல் நடக்குமிடத்தை நெருங்கவிடாமல் ஏற்பாட்டாளர்கள் விரட்டி விட்டனர்.
ஏனையவர்கள் பொங்கலை சுமுகமாக நடத்தி முடித்தனர்.