பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் நேற்று கொழும்பு 5 இல் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் 100 மில்லியன் ரூபா பெறுமதியான 02 கிலோ கொக்கெய்னுடன் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவரும் பத்தரமுல்லையில் உள்ள ஹோட்டல் உரிமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
28 வயதான பிலிப்பைன்ஸ் நபர் நேற்று (17) காலை சுற்றுலா பயணியாக இலங்கை வந்துள்ளார். பண்டாரநாயக்க சிர்வதேச விமான நிலைய சுங்கத்துறையின் கண்ணில் சிக்காமல் நாட்டிற்குள் பிரவேசித்த அவர், விமான நிலையத்திலிருந்து கொழும்பு 5 இல் அமைந்துள்ள ஹோட்டலுக்கு வந்துள்ளார்.
இந்த பிலிப்பைன்ஸ் நாட்டவரைப் பற்றி பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவிற்கு புதன்கிழமை தகவல் கிடைத்ததுடன், கொக்கெய்னை வாங்க வரும் வலையமைப்பில் தொடர்புடைய நபர்களை அடையாளம் கண்டு கைதுசெய்வதற்காக ஹோட்டலுக்கு அருகில் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது.
பத்தரமுல்லையில் ஹோட்டல் ஒன்றை வைத்திருக்கும் வர்த்தகர் ஒருவர், இந்த கொக்கெய்னை எடுத்துச் செல்வதற்காக, இந்த பிலிப்பைன்ஸ்காரர் தங்கியிருந்த ஹோட்டலுக்கு வந்துள்ளார்.
கடத்தல்காரர் நேற்று (17) ஹோட்டலுக்கு வந்து கொக்கெய்ன் பார்சலைப் பெற்றுக் கொண்டு காரில் ஏறிய போது மாறுவேடத்தில் வந்த பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
டுபாயில் வசிக்கும் இலங்கை போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக் என்பவரால் இந்த போதைப்பொருள் அனுப்பப்பட்டுள்ளது.