என் மனைவியை கூட்டிகிட்டு குடிப்பதற்காக எதற்கு பப்புக்கு சென்றீர்கள் என காவல் துறை ஏடிஎஸ்பியிடம் திலகவதி ஐபிஎஸ்ஸின் மகன் பிரபு திலக் ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக காவல் துறையின் முன்னாள் டிஜிபியாக இருந்தவர் திலகவதி ஐபிஎஸ். இவரது மகன் பிரபு திலக். இவர் மருத்துவர். அரியலூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஸ்ருதி.
ஸ்ருதி சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒரு புகாரை கொடுத்துள்ளார். அந்த புகாரில் தனது கணவர் திலக், மாமியார் திலகவதி மீது பரபரப்பு புகாரை கூறியிருந்தார்.
அந்த புகாரில், எனது பெயர் சுருதி, எனக்கு 42 வயதாகிறது. கடந்த 2007ஆம் ஆண்டு எனக்கும் திலக்கிற்கும் திருமணம் நடந்தது. எங்களுக்கு 14 வயதில் மகளும், 7 வயதில் மகனும் உள்ளனர்.
ஆரம்ப காலத்தில் எங்களுக்குள் உறவானது சுமூகமாக போனது. ஆனால் போக போக என் கணவர் என்னை துன்புறுத்த தொடங்கிவிட்டார். இன்று வரை எனது கணவர் கொடுமைப்படுத்தினாலும் அதை என் குழந்தைகளுக்காகவே தாங்கிக் கொண்டிருந்தேன். எனது திருமணத்திற்கு 170 பவுன் நகையும் 1 கோடி ரூபாய் பணமும் எனது தாய் வீட்டில் சீதனமாக கொடுக்கப்பட்டது. ஆனால் எனது கணவரோ இதுவும் போதாது, எனகூறி தினமும் குடித்துவிட்டு என்னை துன்புறுத்துகிறார். எனது மாமியார் திலகவதியும் என்னை மிரட்டுகிறார்.
இதுமட்டுமல்லாமல் என் கணவர் பணியாற்றும் கல்லூரியில் பெண் டாக்டர் ஒருவருடன் கள்ளக்காதல் இருந்து வருகிறது. இதை தட்டிகேட்டால் எனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார். எனது உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. என்னை எப்படியாவது காப்பாற்றுங்கள் என புகார் கொடுத்துள்ளார்.
மேலும் தன்னை கணவர் அடித்ததால் தனது முகம் வீங்கியபடி இருந்த புகைப்படத்தையும் சுருதி கொடுத்திருந்தார்.
இந்த நிலையில் சென்னையில் வணிக வளாகத்தில் தனது கணவரின் கள்ளக்காதலி என சந்தேகிக்கப்படும்
பெண்ணை நேரில் பார்த்த ஸ்ருதி அவரை கடுமையாக தாக்கியுள்ளார். சென்னை அண்ணாநகரில் ஒரு மாலில் பிரபு அந்த பெண்ணுடன் பேசிக் கொண்டிருந்ததை ஸ்ருதி அறிந்துக் கொண்டார். உடனே தனது தந்தையுடன் அங்கு சென்று அந்த பெண் மீது ஸ்ருதி தாக்குதல் நடத்தினார். இது தொடர்பாக எழுந்த புகாரின் பேரில் ஸ்ருதியை போலீஸார் கடந்த ஆண்டு கைது செய்தனர்.
இந்த நிலையில் ஸ்ருதியை அழைத்துக் கொண்டு நாகை ஏடிஎஸ்பி சங்கர் என்பவர் பப்புக்கு சென்று அங்கு இருவரும் குடித்ததை அறிந்த திலகவதியின் மகன், சங்கரை தொடர்பு கொண்டு நியாயம் கேட்டு ஆவேசமான ஆடியோ பரபரப்பை கிளப்பியுள்ளது.
அந்த ஆடியோவில் சங்கரிடம் பிரபு, என் மனைவியை அழைத்துக் கொண்டு பப்புக்கு சென்று குடித்தீர்களா என கேட்கிறார். அதற்கு அவரோ இல்லை டாக்டர் அப்படியெல்லாம் இல்லை, நான் அழைத்துக் கொண்டு செல்லவில்லை என்கிறார்.
அதற்கு பிரபு, நீங்கள் போனதற்கான சிசிடிவி காட்சிகளும் குடிப்பதற்கு காசு செலுத்திய ரசீதும் என்னிடம் இருக்கிறது என்றார்.
அதற்கு சங்கர், ஆமாம் டாக்டர், உங்கள் மனைவிதான் என்னை பப்புக்கு அழைத்தார். மற்றபடி இதில் தவறான உள்நோக்கம் ஏதும் இல்லை என்கிறார்.
அதற்கு பிரபு, நீங்கள் என் அம்மாவுடன் பணியாற்றியவர், எனக்கு நல்ல நண்பர் என்பதால் என் மனைவியை உங்களுடன் பழகவிட்டேன். அதற்கு இப்படித்தான் துரோகம் செய்வீர்களா என கேட்கிறார்.
அதற்கு சங்கர், டாக்டர் நாங்கள் தவறான நோக்கத்தில் போகவில்லை என்கிறார். உங்கள் மனைவிதான் அழைத்தார் என்கிறார்.
அதற்கு பிரபு, என் மனைவியே அழைத்தாலும் நீங்கள் போய்விடுவதா, என்னிடமோ என் அம்மாவிடமோ சொல்லியிருக்கலாம். இல்லாவிட்டால் என் மனைவியிடமே இது தப்பும்மா என சொல்லியிருக்கலாமே என்கிறார்.
அதற்கு சங்கர் நாங்கள் போனோம், குடித்தோம், ஆனால் எந்த தவறும் செய்யவில்லை என்கிறார். அதற்கு பிரபு, நட்பு ரீதியில் சென்றிருந்தால் ஹோட்டலுக்கு போய் சாப்பிட்டிருக்க வேண்டும். எதற்காக பப்புக்கு அழைத்து சென்றீர், நீங்கள் இருவரும் மட்டும் எனக்கு தெரியாமல் இப்படி போகலாமா, உங்கள் மனைவியை நான் அழைத்துக் கொண்டு சென்றால் நீங்கள் சும்மா இருப்பீர்களா. இந்த பிரச்சினையை நான் விட மாட்டேன், டிஜிபிக்கு கொண்டு செல்வேன் என்கிறார்.
அதற்கு சங்கரோ நான் முதல் முறையாக இப்போதுதான் சென்றேன். இதுவரை செல்லவில்லை என்கிறார்.
அதற்கு பிரபு, காக்கிச் சட்டையே உன்னால்தான் அழகாக இருக்கு என என் மனைவி உங்களுக்கு வாட்ஸ் ஆப் ஆடியோ அனுப்பியிருக்கிறார். நீங்களும் கடலூரில் வைத்து அவரை பார்க்க வருமாறு அழைக்கிறீர்கள். இதையெல்லாம் செய்துவிட்டு என் மனைவி மீது ஏன் கை வைத்தீர்கள். இது தவறானது இல்லையா என்கிறார்.
அதற்கு சங்கர் குடி போதையில் இருந்ததால் தெரியாமல் வைத்திருப்பேன், மற்றபடி எந்த தவறும் இல்லை என்கிறார். இப்படியாக அந்த ஆடியோ உரை போகிறது.