இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் ப்ரோட் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
ஓவலில் நடந்த ஐந்தாவது ஆஷஸ் டெஸ்டின் 3வது நாள் முடிவில் ஸ்டூவர்ட் ப்ரோட் தனது ஓய்வை அறிவிப்பை வெளியிட்டார். தற்போது நடைபெற்று வரும் ஆஷஸ் தொடரின் ஐந்தாவது டெஸ்ட் போட்டியே தனது கிரிக்கெட் வாழ்க்கையின் கடைசி போட்டியாக இருக்கும் என ஸ்டூவர்ட் ப்ரோட் அறிவித்துள்ளார்.
ஆஷஸ் தொடரின் முடிவில் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டிருப்பதன் மூலம் 17 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து ப்ரோட் விடைபெற இருக்கிறார்.
ஓய்வு குறித்து பேசிய ப்ரோட், “இது ஒரு அற்புதமான பயணம், நாட்டிங்ஹாம்ஷயர் மற்றும் இங்கிலாந்து பேட்ஜ் அணிந்திருப்பது ஒரு பெரிய பாக்கியம். மேலும், நான் எப்போதும் போல் கிரிக்கெட்டை நேசிக்கிறேன். தற்போதைய ஆஷஸ் தொடர் ஒரு அற்புதமான தொடராக இருந்தது. இத்தொடரில் ஒரு பகுதியாக நானும் இருந்ததில் மகிழ்ச்சி. ஆஷஸ் தொடர் மிகவும் சுவாரஸ்யமாகவும் பொழுதுபோக்காகவும் இருந்தது.
சில வாரங்களாகவே ஓய்வு குறித்து யோசித்து வந்தேன். எனக்கு ஆஷஸ் தொடர் மீது தீராக்காதல். அதனால்தான் எனது கடைசி போட்டி ஆஷஸில் இருக்க வேண்டும் என்று நான் விரும்பினேன். நேற்று இரவு ஸ்டோக்ஸ், ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் ஜோ ரூட் ஆகியோரிடம் எனது ஓய்வு முடிவை கூறினேன். உண்மையைச் சொல்வதானால், இது சரியான நேரம் என்று உணர்ந்ததால் இப்போதே ஓய்வு பெற விரும்புகிறேன்” என்று பேசியுள்ளார்.
ஓல்ட் டிராஃபோர்டில் நடந்த நான்காவது ஆஷஸ் டெஸ்டில் தான் ஸ்டூவர்ட் பிராட் 600 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய ஐந்தாவது பந்துவீச்சாளர் சாதனையை படைத்தார். இதற்கு இச்சாதனையை இலங்கையின் முத்தையா முரளிதரன் (800), அவுஸ்திரேலியாவின் ஷேன் வோர்ன் (708), இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் (688) மற்றும் இந்தியாவின் அனில் கும்ப்ளே (619) இந்த சாதனையை படைத்திருந்தனர். இந்த எலைட் கிளப்பில் ஸ்டூவர்ட் ப்ரோட் கடைசியாக இணைந்திருந்தார். இந்தப் பட்டியலில் இடம்பெற்ற இரண்டாவது வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையும் இதில் அடக்கம். ப்ரோட் 166வது டெஸ்டில் இந்தச் சாதனையை புரிந்த நிலையில் தற்போது ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதையடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
முன்னாள் இங்கிலாந்து வீரர் கிறிஸ் ப்ரோட்டின் மகனான ஸ்டூவர்ட் ப்ரோட், 2007இல் மைக்கல் வோகன் தலைமையில் இலங்கைக்கு எதிராக கொழும்பில் நடந்த டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். பாடசாலைக் காலத்தின்போது துடுப்பாட்ட வீரராக கிரிக்கெட் வாழ்க்கையில் அடியெடுத்து வைத்த ப்ரோட் மிகத் தாமதமாகவே பந்துவீச்சு பக்கம் தனது கவனத்தைத் திருப்பினார்.
ப்ரோட் இதுவரை 20 முறைக்கும் மேல் ஐந்து விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். அதேபோல் டெஸ்ட் கிரிக்கெட்டில் மூன்று முறை 10 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
இங்கிலாந்தின் 2015,ல் ட்ரென்ட் பிரிட்ஜில் நடந்த ஆஷஸ் போட்டியில் ஆன்டர்சன் காயம் காரணமாக போட்டியில் பங்கேற்க முடியாத நிலை வந்தபோது தனியொரு ஆளாக போராடி 8-15 என்ற கணக்கில் அவுஸ்திரேலிய விக்கெட்களை வீழ்த்தி அணியை வெற்றி பெறவைத்தார் ப்ரோட். இப்போட்டி அவரின் கிரிக்கெட் கரியரில் மிகச்சிறந்த போட்டியாக அமைந்தது. இரண்டு டெஸ்ட் ஹாட்ரிக் எடுத்த ஒரே இங்கிலாந்து பந்துவீச்சாளரும் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
33 வயதான ப்ரோட்.166 டெஸ்ட் போட்டிகளில் 600 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார். 121 ஒருநாள் போட்டிகளில் 178 விக்கெட்டுக்களையும், 56 ரி20 போட்டிகளில் 65 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியுள்ளார்.