கதுருவெலயிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று நேற்று (9) இரவு 7.30 மணியளவில் பொலன்னறுவை – மட்டக்களப்பு பிரதான வீதியின் மன்னம்பி்டிய, கொட்டலிய பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் 40 பேர் படுகாயமடைந்து பொலன்னறுவை மற்றும் மன்னம்பிட்டிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த மற்றும் காயமடைந்த பயணிகள் அக்கரைப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள்.
உயிரிழந்தவர்களில் 10 ஆண்களும், ஒரு பெண்ணும் உள்ளடங்குகிறார்.
இந்த பேருந்தில் அறுபத்தேழு பயணிகள் பயணம் செய்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
பேருந்தில் சிக்கியிருந்த பயணிகளை இராணுவத்தினர், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து உடனடியாக மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
பேருந்தில் பயணம் செய்த சிலர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் அல்லது மூழ்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அவர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் கடற்படை சுழியோடிகள் உள்ளிட்ட குழுவினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
அதிவேகமாக சென்ற பேருந்து கொட்டலிய பாலத்தில் மோதி ஆற்றில் விழுந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
பேருந்து ஆற்றில் கவிழ்ந்தபோது, பயணிகளின் அலறல் சத்தம் கேட்டதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
சாரதி நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, இந்த பாலத்தில் சில வருடங்களின் முன்னரும் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.