பதவி ஸ்ரீ புர பிரதேசத்தில் யான் ஓயா நீர்த்தேக்கத்தில் இருந்து நெற்பயிர்களுக்கு நீரை வெளியேற்றும் கால்வாயில் நீந்திக் கொண்டிருந்த பன்னிரெண்டு மற்றும் பதினான்கு வயதுடைய இரு சிறுவர்கள், மரத்திலிருந்து கால்வாயில் குதிக்கும் போது தலைகள் மோதி நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் (1) பிற்பகல் 3.45 மணியளவில் இடம்பெற்றதாக பதவி ஸ்ரீபுர பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்கள் இருவரும் வேறு சில நண்பர்களுடன் சுமார் ஐந்தரை அடி ஆழமுள்ள கால்வாயில் குளிக்கச் சென்றுள்ளனர்.
மரத்தில் ஏறி வாய்க்காலில் குதித்து வெகுநேரம் சிறுவர்கள் குளித்து முடித்து கரைக்கு சென்றுள்ளனர்.
அதன்பின், நீரில் மூழ்கிய சிறுவர்கள் இருவரும் மீண்டும் ஒருமுறை கால்வாய் கரையில் உள்ள மரத்தில் ஏறி கால்வாயில் குதித்தபோது, இருவரின் தலைகளும் மோதியதில், இருவரும் தண்ணீரில் மாயமாகினர்.
சடலங்களின் பிரேத பரிசோதனை நேற்று (02) பதவிய ஆதார வைத்தியசாலையில் நடைபெறவிருந்ததுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பதவிய ஸ்ரீபுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



