வவுனியாவில் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள சீனித் தொழிற்சாலை, கரும்பு நாற்று உற்பத்தி மையம் பற்றிய சர்ச்சை உருவாகியுள்ளது. ஆரம்பத்தில் இந்த சீனித் தொழிற்சாலை சீனாவின் பின்னணியில் உருவாகுவதாக சொல்லப்பட்டது.
என்றாலும், தற்போது கிடைக்கும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களின் அடிப்படையில், இந்த தொழிற்சாலையின் பின்னணியில் சீனா இல்லை.
சீனித் தொழிற்சாலைக்கு எதிரான பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ள தரப்புக்கள், மக்களை அதிகமாக பயமுறுத்தவும், எதிர்பிற்கு அரசியல் சாயம் பூசவுமே சீனப் பூச்சாண்டியை காட்ட ஆரம்பித்துள்ளனர்.
இந்த தொழிற்சாலையின் பின்னணியில் சீனா இல்லையென்பதை, இங்குள்ள பல அரசியல் கட்சிகளின் தலைவர்களிற்கு இந்திய தரப்பினரே நேரடியாக குறிப்பிட்டுள்ளதாக தகவல்.
இந்த தொழிற்சாலையில் சீனா சம்பந்தப்பட்டிருந்தால், இந்தியா இவ்விதமாக காய் நகர்த்தியிராது என்பது சாதாரண அரசியல் அறிவுடையவர்களிற்கும் தெரிந்திருக்கும். யாழ்ப்பாணத்தை ஒட்டிய 3 தீவுகளில் சீனா புதுப்பிக்கத்தக்க மின்சக்தி திட்டத்தை ஆரம்பிக்கவிருந்தபோது, இந்தியா எப்படி செயற்பட்டதோ, அதே விதமாக சந்தடியின்றி விடயத்தை முடித்திருக்கும்.
இந்தியா செல்ல தவமாய் தவமிருக்கும் ஜனாதிபதிக்கு வரும் மாதமளவில்தான் அனுமதி கிடைத்துள்ளது. சீனித்தொழிற்சாலை சீனா பின்னணியென்றால், அது பற்றி அரசிடமே இந்தியா பேசியிருக்கும். அதைவிடுத்து, சம்பந்தப்பட்ட யாரிடமுமே சொல்லாமல், யாழ்ப்பாணத்தில் ஒரு பத்திரிகையிடம் சொல்வார்கள் என்பதில் உள்ள லொஜிக் மிஸ்ரேக் அனைவருக்கும் புரியக்கூடும்.
இது சீன பின்னணியுடைய தொழிற்சாலை, அந்த தொழிற்சாலையால் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களின் நிலங்கள் சுவீகரிக்கப்பட போகிறது என்ற பொய் பிரச்சாரத்தை நடத்தி வருவது, தமிழ் அரசு கட்சியின் எம்.ஏ.சுமந்திரன் தரப்பு இணையப் பத்திரிகையொன்றுதான்.
இந்த விடயம் பற்றிய செய்தியை ஆரம்பத்தில் பிரசுரித்தபோது, தமிழ் பக்கமும், அது சீன பின்னணியுடைய தொழிற்சாலையா என்ற கேள்வியை எழுப்பியிருந்தது. ஆரம்பத்தில் தொடர்புடைய சில அதிகாரிகள் வழங்கிய தகவலினால் அப்படியான சந்தேகம் எழுப்பப்பட்டது. என்றாலும், அந்த இடத்திலிருந்து தொடர்ந்து தகவல்களை தேடியதில், தொழிற்சாலைக்கும் சீனாவுக்குமான எந்த தொடர்பையும் யாராலும் காண முடியவில்லையென்றதே தற்போதைய நிலை.
இந்த தொழிற்சாலைக்கு 3 மாவட்டங்களின் நிலங்களை சுவீகரிக்க அமைச்சரவை அனுமதித்துள்ளது என்றதும் போலித்தகவல். தற்போதைய நிலவரப்படி, வெறும் 200 ஹெக்டயர் நிலமே தொழிற்சாலைக்னு வழங்கவே அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, 15,000 ஏக்கர் நிலம் பொதுமக்களிற்கு வழங்கவும், 12,000 ஏக்கர் கூட்டுறவு, பெரு நிறுவனங்களுக்கு வழங்க சீனித் தொழிற்சாலை நிறுவனம் அனுமதி கோரியுள்ளது.
சீனித் தொழிற்சாலையை தீவிரமாக எதிர்ப்பது எம்.ஏ.சுமந்திரன் தரப்பு. அவரது தரப்பு ஊடகமே தினம்தினம் புரளிகளை கிளப்பி விடுகிறது. போதாதற்கு அவரது குரூப்பில் உள்ள முல்லைத்தீவு ரவிகரன் திடீரென போராட்ட அறிவிப்பெல்லாம் விடுத்துள்ளார்.
இதில் சுவாரஸ்யமான விடயம் என்னவென்றால், அதே சுமந்திரன் தரப்புத்தான் சீனித் தொழிற்சாலையை வரவேற்றுமுள்ளனர். அதற்கு ஆதாரமாக அப்போதைய பத்திரிகை செய்திகள் உள்ளன.
இந்த சீனித் தொழிற்சாலைக்கான முன்மொழிவு இப்பொழுது சமர்ப்பிக்கப்பட்டதல்ல. 2016ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்டது. அப்போது நல்லாட்சி காலம். அதில் சம்பந்தன், சுமந்திரன் எவ்வளவு அதிகாரம் மிக்கவர்களாக, விசேட அதிரடிப்படை பாதுகாப்புடன் வளைய வந்தனர் என்பதை இப்போது நினைவுபடுத்த வேண்டியதில்லை.
2018ஆம் ஆண்டு தாய்லாந்து பிரதமர் இலங்கை வந்தபோது, இரா.சம்பந்தன் அவரை சந்தித்தார். அந்த சந்திப்பில், தாய்லாந்து தரப்பில் முன்மொழியப்பட்டுள்ள சீனித் தொழிற்சாலையை வரவேற்றுள்ளார். இந்த ஒரு சீனித்தொழிற்சாலையல்ல, இதே போன்ற இன்னும் பல தொழிற்சாலைகளை வடக்கு கிழக்கிற்கு கொண்டு வாருங்கள் என்றும் கேட்டுள்ளார். அந்த சந்திப்பில் இரா.சம்பந்தனுடன் கலந்து கொண்ட மற்றையவர் எம்.ஏ.சுமந்திரன்.
சுமந்திரன் தரப்புக்கு அப்பொழுது இனித்த தாய்லாந்து சீனி, இப்பொழுது கசக்கிறது என்றால், என்ன காரணமாக இருக்கும்?
இது ஒன்றும் சிதம்பர இரகசியமல்ல. வெறும் அரசியல் மட்டும்தான் காரணமாக இருக்கும்.
இந்த சீனித் தொழிற்சாலை வந்தால், ஆயிரக்கணக்கானவர்களிற்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். ரெலோ பின்னணியில் இருந்து இந்த திட்டத்தை செயற்படுத்தினால், வேலைவாய்ப்பு வழங்குவதில் ரெலோ கட்சினரும், தமிழ் தேசிய கூட்டமைப்புமே செல்வாக்கு செலுத்துவார்கள். அப்படியொரு நிலைமை வந்தால், தமிழ் அரசு கட்சிக்கு தேர்தல் அரசியலில் பின்னடைவை உருவாக்கும் என்ற கணக்குத்தான் தற்போதைய எதிர்ப்பு.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் அப்போதைய தமிழ் தேசிய கூட்டமைப்பு சறுக்கியது. தேர்தலின் பின்னரான ஊடக சந்திப்புக்களில் சுமந்திரன் சுட்டிக்காட்டிய விடயங்களில் முதன்மையானது- தொழிற்சலை உருவாக்கல், வேலைவாய்ப்பு பெற்றுக்கொடுத்தல் ஆகிய விடயங்கள். மக்கள் இவற்றை எதிர்பார்ப்பதாகவும், அவற்றை செய்யாததும் தமது தரப்பின் தவறு என்றும், புலம்பெயர் தரப்பின் பங்களிப்போடு தொழிற்சாலைகளை உருவாக்குவதற்கான முயற்சிகளை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவித்திருந்தார்.
அவ்வளவுதான். அதற்கு பின்னர் எதுவும் நடக்கவில்லை. தமிழ் தேசிய அரசியல் செய்பவர்களிற்கு உள்ள சிறப்பு சலுகை அதுதான். எதையும் செய்யாமல் விட்டுவிட்டு, “போராட்டம் வெடிக்கும்“, “ஜனாதிபதியிடம் இடித்துரைப்பு“, “நீதிமன்றத்தில் முழக்கம்“ மாதிரியான ஐயிற்றங்களை இறக்கி விட்டு, வாக்காளர்களை சமரசப்படுத்திக் கொள்ளலாம். சுமந்திரன் மட்டும் விதிவிலக்கா என்ன!
இவற்றை சொல்வதால், நாம் சீனித் தொழிற்சாலையை ஆதரிக்கிறோம் என்பதல்ல. சீனித் தொழிற்சாலை எதிர்ப்பு என்ற போர்வையில் நடக்கும் கடைந்தெடுக்கப்பட்ட அரசியல் அயோக்கியத்தனம் எப்படி நடக்கிறது என்பதை சுட்டுக்காட்டுவதே நோக்கம்.
இந்த விவகாரத்தில் மக்கள் தேவையற்ற சலனமடைய கூடாது. சீனித் தொழிற்சாலையில் சீன பூச்சாண்டி காட்டுபவர்களிற்கு அவர்களது முதலாளியிடமிருந்து சம்பளம் கிடைக்கும். சம்பளம் கொடுக்கும் முதலாளிகளிற்கு அரசியல் இருப்புள்ளது. ஆனால் இவற்றை நம்பி ஏமாந்தால் மக்களிற்கு எதுவுமிருக்காது.
சீனித் தொழிற்சாலை விவகாரத்தில் அரசியல்வாதிகளை தவிர்த்து, துறைசார்ந்தவர்களை உள்ளடக்கிய கலந்துரையாடலே சமூகத்தில் அவசியமானது.
சீனித் தொழிற்சாலை விவகாரத்தில் அரசியல்வாதிகளின் எதிர்ப்பு, போராட்ட அறிவிப்புக்களை மக்கள் புறக்கணித்து, கவனம் செலுத்த வேண்டிய விடயங்கள் சில உள்ளன.
1.இந்த தொழிற்சாலையால் சுற்றுச்சூழல் பாதிப்பு உள்ளதா?
2.நீர் வழங்கல் போர்வையில் மகாவலி திட்டம் நடைமுறைப்படுத்தப்படுமா, சிங்கள மற்றும் முஸ்லிம் குடியேற்றங்கள் நிகழுமா?
முதலாவது சந்தேகத்திற்கு விடை காண, அரசியல் தரப்புக்களற்ற துறைசார்ந்த புத்திஜீவிகளுடனான பகிரங்க கலந்துரையாடல்கள் நடத்தப்பட வேண்டும். கட்சி மனநிலைக்கு அப்பால், தமிழ் சமூகமாக சிந்தித்து செயற்பட வேண்டும்.
இரண்டாவது சந்தேகத்துக்கான உத்தரவாதத்தை, திட்டத்தை முன்னின்று செயற்படுத்துவதாக கூறும் ரெலோ தரப்பு வழங்க வேண்டும். இந்த திட்டத்தை ரெலோ தரப்பு முன்னின்று செயற்படுத்தினால், இப்போது அரசியல் சார்பு ஊடகங்கள் சித்தரிப்பதை போல அது ஒரு தீட்டான நடவடிக்கையல்ல. மேற்படி இரண்டு சந்தேகங்களும் தீர்க்கப்பட்டால், தமிழ் மக்களிற்கு கிடைக்கும் மாபெரும் வரப்பிரசாதமாக அது அமையும். இதுவரை எந்த தமிழ் கட்சியும் செய்யாத மகத்தான பணியாகவும் இருக்கும்.
இதில் மற்றொரு உண்மையும் உள்ளது. இந்த திட்டத்தின் பின்னணியில் சீனா இருந்தால் கூட அது தீட்டு அல்ல. சீனா என்றாலே உதறல் எடுக்கும் நமது அரசியல்வாதிகள், சீனாவை தவிர்த்து விட்டால், அதற்கு பதிலாக இந்தியாவிடமிருந்தோ, அமெரிக்காவிடமிருந்தே அப்படியான திட்டத்தை கொண்டு வர வேண்டுமென்பதுதான் சரியாக இருக்கும். ஆனால், கள யதார்த்தம் மற்றும் நமது கட்சிகளும். அரசியல்வாதிகளும் இந்தியாவின் கொல்லைப்புறத்தில் கட்டப்பட்டுள்ள வளர்ப்பு நாய்கள் போன்றவர்கள் என்பதால், இந்த விவகாரத்தை விட்டு விடுவோம். நல்ல வேளையாக, தற்பேது கிடைக்கும் தகவல்கள் இந்த சீனி, சீனாவின் சீனியல்ல என்பதே. அந்தளவில் மகிழ்ச்சியடையலாம்.
இந்த சீனித்தொழிற்சாலை பிரமாண்டமான திட்டம். தமிழ் விவசாயிகளை மாத்திரம் நம்பி இதனை செயற்படுத்துவது எவ்வளவு சாத்தியமென்பது தெரியவில்லை. சுற்றுச்சூழல் பிரச்சினைகள், மகாவலி, சிங்கள மற்றும் முஸ்லிம் குடியேற்ற சந்தேகங்களை தீர்த்து இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால்- தமிழ் விவசாயிகளை அதிகபட்சமாக பயன்படுத்தும் ரெலோவின் திட்டம் வெற்றிபெற்றால்- அது தமிழ் சமூகத்திற்கே நன்மையளிக்கும்.