25.9 C
Jaffna
December 13, 2024
Pagetamil
இலங்கை

வயல்மாதா: யாழ்ப்பாண கன்னியாஸ்திரியின் கதையா?… பிரான்ஸில் நூல் எரிப்பு முதல் யாழ்ப்பாண ஊரை விட்டு ஒதுக்கியது வரையான சர்ச்சையின் பின்னணி!

பிரான்ஸில் வாழும் ஈழத்தமிழ் எழுத்தாளர் டானியல் ஜெயந்தனின் வயல்மாதா சிறுகதை தொகுதிக்கு ஏற்பட்ட எதிர்ப்பு அடங்கவில்லை. பிரான்ஸிலுள்ள நாவாந்துறை மக்கள் அமைப்புக்கள் சார்ந்த எந்த பொறுப்பிலும் டானியல் ஜெயந்தன் அங்கம் வகிக்கக்கூடாது என அந்த பகுதி மக்கள் கூடி முடிவெடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணம் நாவாந்துறை பகுதியை பின்னணியாக கொண்டவர் டானியல் அன்ரனி.  மூத்த எழுத்தாளர் டானியல் அன்ரனி. இடதுசாரிய கொள்கையுடையவர். அவரது மகன் டானியல் ஜெயந்தன் தற்போது புலம்பெயர்ந்து பிரான்ஸில் வசிக்கிறார்.

அவரது முதலாவது சிறுகதை தொகுதி வயல்மாதா. பிரான்சில் நெவர் பகுதியில் கடந்த வாரம் வெளியானது. அந்த பகுதியில் வசிக்கும் நாவாந்துறை பகுதி மக்கள் வெளியீட்டில் கலந்து கொண்டிருந்தனர்.

அந்த சிறுகதை தொகுதியில் இருந்த வயல்மாதா என்ற சிறுகதையே சர்ச்சைக்குரியதாகியுள்ளது. அந்த கதைக்கு ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

உண்மை சம்பவ பின்னணி?

ஓரிரு வருடங்களின் முன்னர் நடந்த உண்மை சம்பவமொன்றை அடிப்படையாக கொண்டு அந்த கதை எழுதப்பட்டுள்ளதாக, ஊர் மக்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.

நாவாந்துறையை பின்னணியாக கொண்ட கிறிஸ்தவ அருட்சகோதரி ஒருவர், பிறிதொரு மாவட்டத்தில் தங்கியிருந்த சமயத்தில் கடத்தப்பட்டதாக கூறப்பட்டது. பின்னர்தான் தெரிய வந்தது- அது கடத்தல் அல்ல, தனது பாடசாலைக்கால காதல் தொடர்பினால் அவர் ஆன்மீக பணியிலிருந்து வெளியேறி, குடும்ப வாழ்க்கைக்குள் நுழைந்தது.

கடுமையான ‘கிறிஸ்தவ ஒழுக்கத்தை’ பின்பற்றும் கரையோர சமூக மக்கள் மத்தியில் இந்த சம்பவம் ஒரு கரும் புள்ளியாக அமைந்தது. அவர்கள் அதனையொரு ‘துன்பியல் சம்பவமாக’ கருதி, மறக்க முனைந்து கொண்டிருக்கிறார்கள். அந்த சம்பவமே கதையில் இடம்பெற்றுள்ளது என்பது அவர்களின் குற்றச்சாட்டு.

கதைமாந்தர்களின் உண்மையான பெயர்கள் இடம்பெற்றுள்ளது, ஆபாசமாக வர்ணிக்கப்பட்டுள்ளார்கள், தூசண வார்தைகள் இடம்பெற்றுள்ளது என்பது கிராம மக்களின் குற்றச்சாட்டு.

ஆனால் எழுத்தாளர் டானியல் ஜெயந்தன் அதை மறுத்துள்ளார். வயல்மாதா கதை முழுமையான கற்பனை கதையென்றும், அப்படியொரு சம்பவம் நடந்ததா என்பதே தனக்கு தெரியாது என்றும் குறிப்பிட்டுள்ளார். கற்பனை கதையில் வரும் பாத்திரங்கள் எப்படி இன்னொரு சம்பவத்துடன் தொடர்புடைய உயிர்வாழும் நபர்களாக அமைய முடியும் என்பது அவருடைய கேள்வி.

நூல் எரிப்பு

புத்தக வெளியீடு நடந்த அன்றே, சர்ச்சை ஆரம்பமானது. புத்தகத்தில் தூசண வார்த்தைகள் உள்ளன, ஆபாச வார்த்தைகள் உள்ளன என அடிக்கோடிட்டு, புத்தகத்தின் பக்கங்கள் எதிர்ப்பாளர்களால் பரவலாக பகிரப்பட்டது.

நெவர் பகுதியிலுள்ள நாவாந்துறை மக்களை உள்ளடக்கிய வட்ஸ்அப் குரூப்களிலும் இது பற்றி தீவிரமாக பரப்புரை செய்யப்பட்டது. கடந்த 21, 22ஆம் திகதிகளில் எதிர்ப்பு தீவிரம் பெற்றிருந்தது.

நாவாந்துறை பின்னணியுடைய கிறிஸ்தவர்கள் பலர் ஒன்று கூடி, வாகனங்களில் டானியல் ஜெயந்தனின் வீட்டுக்கு சென்று, வீட்டின் முன் கூடி நின்றுள்ளனர். ஜெயந்தன் வீட்டில் இருக்கவில்லை. பின்னர் அருகிலுள்ள தேவாலயத்துக்கு சென்று, அங்கு வைத்து வயல் மாதா சிறுகதை தொகுதியை தீயிட்டு கொளுத்தியுள்ளனர்.

கருத்து சுதந்திரத்தை பேணும் மிக முக்கிய நாடுகளில் பிரான்ஸ் முதன்மையானது. இலங்கையில் செயற்படுவதை போல, அங்கு செயற்பட முடியாது. இந்தவகையான நூல் எரிப்பு நடவடிக்கைகள் எல்லாம் அங்கு பாரதூரமான விவகாரங்கள். குற்றம் நிரூபிக்கப்படின் பெருந்தொகையான தண்டம் அறிவிப்படும்.

பிரான்ஸின் கருத்து சுதந்திரத்தை புரிய வைக்க ஒரு உதாரணம். சில வருடங்களின் முன்னர், சக்திக சத்குமார என்ற இலங்கை சிங்கள எழுத்தாளர், அர்த்த என்ற சிறுகதையை தனது பேஸ்புக்கில் பதிவிட்டார். அந்த சிறுகதை பௌத்த மத நம்பிக்கைகளை சிதைப்பதாக கூறி, பிக்குவொருவர் பொலிசில் முறையிட, சக்திக சத்குமார கைது செய்யப்பட்டார். அவர் நிராபராதியென நீதிமன்றத்தால் விடுவிக்கப்படுவதற்கு முன்னர், 2 வருடங்கள் நீதிமன்ற வழக்கை எதிர்கொண்டார்.பிரான்ஸில் இப்படியொரு சம்பவத்துக்கு வாய்ப்பேயில்லை.

அப்படியான பிரான்ஸில் ஒரு இலக்கிய பிரதிக்கு தடைவிதிக்க கோரி நாவாந்துறை மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

படைப்பு சுதந்திரம்

புத்தகத்தில் ஆபாசமாக எழுதப்பட்டுள்ளதாக முதலில் குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து, நூல் எரிப்புக்கு சமூக ஊடகங்களில் பரவலான கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன.

எனினும், பின்னர் நிலைமை மாறியது. உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு, கதை மாந்தர்களின் பெயர்களை பாவித்து, அவர்கள் அடையாளம் காணப்படும் விதமாக, அவர்களை சங்கடப்படுத்தும் விதமாக கதை எழுதப்பட்டுள்ளதாக எதிர்ப்பாளர்களால் குற்றம்சாட்டப்பட்டது.

நூல் எரிப்பு சம்பவம் தொடர்பான செய்தியை தமிழ்பக்கமும் பிரசுரித்திருந்தது. அபாச வார்த்தைகளிலிருந்தது என குறிப்பிட்டு நூல் எரிப்பதை கண்டனமும் தெரிவித்திருந்தோம்.

அதன்பின்னர், பிரான்ஸிலுள்ள பல நாவாந்துறை வாழ் மக்கள் தமிழ்பக்கத்தையும் தொடர்பு கொண்டு பேசினர். உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட கதை என்ற ஒரு வரியை மட்டும் சொன்னார்களே தவிர, “உண்மை சம்பவத்தை“ பற்றி மேலதிகமாக ஒரு வார்த்தையும் பேச அவர்கள் தயாராக இருக்கவில்லை. “அருட்சகோதரி“ விடயத்தை பேசுவதே பாவச்செயல் என அந்த பகுதி மக்கள் கருதினார்கள்.

அதனால், சம்பவத்தின் கதை மாந்தர்களின் உண்மை பெயர்கள், அடையாளம் நூலில் எந்தளவு வெளிப்படையாக பதிவாகியுள்ளது என்பதை எம்மால் சுயாதீனமாக உறுதி செய்ய முடியவில்லை.

கிறிஸ்தவ ஒழுக்கத்தை கேள்விக்குட்படுத்தி விட்ட கோபப் பின்னணியிலேயே இந்த குற்றச்சாட்டுக்கள் எழுவதை புரிந்து கொண்டாலும், அந்த சமூகப் பின்னணியில் அந்த கோபத்தையும் புரிந்து கொள்ள முடிகிறது.

அந்த கதையுடன் தொடர்புடையவர்களும் பிரான்ஸின் அந்த பகுதியில் வசிப்பதாக கூறப்படும் நிலையில், அவர்களின் உணர்வுகளும், அடையாளங்களும் மதிப்பளிக்கப்பட வேண்டியவை. அந்த பொறுப்புணர்வு எழுத்தாளருக்கும் உள்ளது. என்றாலும், கதையுடன் தொடர்புடைய யாரும் இதுவரை பகிரங்க எதிர்ப்போ, எழுத்தாளரிடம் தனிப்பட்ட முறையில் எதிர்ப்போ தெரிவிக்கவில்லையென்பதும் முக்கியமான விடயம்.

இதேவேளை, டானியல் ஜெயந்தனின் எழுத்துக்களை மற்றொரு சாரார் ஆதரிக்கிறார்கள். கருத்து சுதந்திரம், படைப்பு சுதந்திரத்தில் உள்ளூர் வரையறைகளுடன் அணுகாதீர்கள் என அவர்கள் கூறுகிறார்கள்.

டானியல் ஜெயந்தன் தனது சமூகத்திலிருந்து ஒதுக்கி வைக்கப்படும் அபாயத்தை உணர்ந்தும், அவர் படைப்பு சுதந்திரத்தில் சமரசமற்ற கறாரான நிலைப்பாட்டுடன் இருக்கிறார் என அவரது தரப்பினர் கூறுகிறார்கள்.

முஸ்லிம் சமூகத்தின் கோபத்துக்கு இலக்கான சல்மான் ருஷ்டி சுதந்திரமான நடமாட்ட வாய்ப்பையே இழந்தார். இப்படியாக படைப்பு சுதந்திரத்திற்காக எந்த எல்லைக்கும் சென்று விலை கொடுக்க தயாராக இருந்த ஏராளம் படைப்பாளர்களின் வரலாற்றை உலகம் கண்டுள்ளது என்கிறார்கள் அவர்கள்.

உலகத்தின் ஏனைய நாடுகள் பலவற்றில் மத நம்பிக்கைகளை கேள்விக்குட்படுத்திய பல படைப்புக்களுடன் ஒப்பிடுகையில், இந்த விவகாரம் ஒன்றுமேயில்லாத விடயம், மரபான கிறிஸ்தவ நம்பிக்கையாளர்களின் எதிர்ப்பு இது என்கிறார்கள் அவர்கள்.

ஆனால், நூல் எரிப்பு என்ற தகவல் வந்ததும், டானியல் ஜெயந்தனை ஆதரித்த அனைவரும், இப்பொழுதும் அவரை ஆதரிக்கவில்லையென்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.  உண்மைச்சம்பவத்தை அடிப்படையாக கொண்டது, கதை மாந்தர்களின் பெயர்களும், இடங்களும் பல இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்ற தகவல் பரவியதும், டானியல் ஜெயந்தனை ஆதரித்த ஒரு பகுதியினர்  தமது நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கி விட்டனர்.

ஊர் அமைப்புக்களில் இருந்து விலக்கப்பட்ட எழுத்தாளர்.

புலம்பெயர்ந்து வாழும் நாவாந்துறை மக்கள், சென் மேரிஸ் விளையாட்டு கழகம்  தொடர்புடைய எந்த பொறுப்புக்களிலும் டானியல் ஜெயந்தன் நீடிக்க முடியாது, இனிமேல் பதவிவகிக்க முடியாது என பிரான்ஸிலுள்ள அந்த பகுதி மக்கள் முடிவெடுத்துள்ளனர்.

ஏற்கெனவே, ஊரிலிருந்து விலக்கி வைக்கப்பட்ட தமிழ் எழுத்தாளர்களின் வரலாறு தமிழகத்தில் பல உள்ளது.

டானியல் ஜெயந்தன் தனது எழுத்தில் உறுதியாக இருந்து, இலங்கை பின்னணியிலும் ஒரு எழுத்தாளர் ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப்படும் நிலையில் உள்ளார். இரு தரப்புக்குமிடையில் சில கருத்து பரிமாற்றங்கள் நடந்ததாக அறியப்படுகிறது. ஆனால் இதுவரை உறுதியான எந்த முடிவும் ஏற்படவில்லை.

படைப்பு சுதந்திரம் என்ற கருத்துருவாக்கத்துக்கும், உள்ளூர் உணர்வுக்குமிடையிலான முரண்பாடு இது முதலாவது சந்தர்ப்பமல்ல. ஆனால், நாவாந்துறைக்கு முதலாவதாக இருக்கலாம். அதனால்தான் விவகாரம் தீப்பற்றி எரிகிறது.


வயல்மாதா சிறுகதை தொகுதி தொடர்பான சர்ச்சைகள் தீவிரம் பெற்றுள்ள நிலையில், எழுத்தாளர்களின் கருத்து சுதந்திரம் மற்றும் எழுத்தாளர்களின் சமூகப் பொறுப்புணர்வு தொடர்பில் தமிழின் முக்கிய படைப்பாளுமைகள் சிலரின் கருத்துக்களை கேட்டோம். அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு-

எழுத்தாளர் ஷோபா சக்தி (பிரான்ஸ்)

படைப்பாளியின் கருத்துச் சுதந்திரத்திற்கு எல்லையே இல்லை என்பதுதான் என் நிலைப்பாடு. அரசு, இயக்கங்கள், மத நிறுவனங்கள், ஊர்ச் சங்கங்கள் என யாருக்குமே எழுத்துச் சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் உரிமை இருக்கக்கூடாது. இலக்கியம் எழுதியதற்காக கொலை, சிறை போன்ற கொடுமைகளுக்கு இணையானதே இலக்கியப் புத்தகத்தை தீயிடும் நடவடிக்கையும்.

படைப்பாளி சமூகத்தில் நடக்கும் உண்மையை எழுதுவது இயல்பானதும், கடமையுமாகும். நம்முடைய முன்னோடிகளான கே.டானியல், என்.கே. இரகுநாதன் போன்றவர்களெல்லாம் இதைச் செய்திருக்கிறார்கள்.

ஆனால், சமூக உண்மைகளை ஒரு எழுத்தாளர் என்ன நோக்கத்துக்காக எழுதுகிறார் என்ற கேள்வி அடிப்படையானது. சமூக இழிவுகளைச் சுட்டிக்காட்டி, சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தினால் அது முற்போக்கானதே. மாறாக, சமூகத்தில் நடந்த உண்மை நிகழ்வொன்றைத் தனிப்பட்ட நபர்களைப் பழிவாங்ககும் , அவமானப்படுத்தும் உள் நோக்கத்தோடோ, கிளுகிளுப்ப்புக்காகவோ எழுதினால் அது இலக்கிக் கேடு. நச்சு இலக்கியம்.


கவிஞர் சுகன் (பிரான்ஸ்)

பேய்க்குப் படித்துத் தாயில் ஏவிப் பார்க்கிறதெனச் சொல்வது;

இன்றைய எழுத்தியக்கத்தில் இச் சொல்வழக்கிற்குப் பெரும் பொருளுண்டு.

சர்ச்சைகளைக் காமுற்று அதே சர்ச்சைகளின் வழிகாட்டலில் மேலும் மேலும் சர்ச்சைகளிற்காகவும் பரபரப்பின் உச்ச உணர்வு நிலை தரும் சுவாரஸ்யத்திற்காகவும் வாசிப்பைக் கைக்கொள்வோர் பலருண்டு.

கருத்து பேச்சு எழுத்துச் சுதந்திரம் எனச் சொல்லிக்கொண்டுதான் இன்றைய ஏகாதிபத்திய வல்லாண்மை நாடுகள் நமது கொடும் போர்களையும் அழிவுகளையும் கொண்டு நடாத்துகின்றன.

இடம் பொருள் ஏவல் என சூழ் நிலைகளுக்குப் பொருத்தமான நிலைகளில் முடிவுகளைக் கொண்டிருப்பதற்கு ஓர் அனுபவமும் பாத்தியமும் வேண்டும்.

ஒரு சல்மான் ருஸ்டி இருந்தால் புரிந்துகொள்ளலாம் , எல்லோரும் சல்மான் ருஸ்டிகளாக ஆக விருப்பின் சல்மான் ருஸ்டிபோல எடுப்பார் கைப்பிள்ளைகளாக பொலிஸ் பாதுகாப்பில் நிரந்தரமாக வாழவேண்டியதுதான். பாதுகாப்பிற்கும் கைவிடலுக்கும் ஏகாதிபத்தியங்களின் கைகள் வஞ்சகம் கொண்ட தளத்தில் இயங்குபவை.அசைபவை.

வயல்மாதா விவகாரத்தில் ஏன் கருத்துச் சுதந்திர விவகாரத்தைக் கொண்டுபோய்ப் பொருத்த முடியாதெனில் இது உள்ளூர் மட்டத்திலான ஒரு பிணக்கு .
மேலும் இது பரஸ்பர நம்பிக்கையில் பேசித் தீர்க்கப்படவேண்டிய எதிர்பாரா விபத்து. இங்கே ஒரு இணக்கத்திற்கான வாய்ப்புகள் உண்டு.

இல்லை நான் எழுதியது சரி, நான் இப்படித்தான் எழுதுவேன் என்றால் அதற்கான விலையையும் கொடுத்தாக வேண்டும்.

நீல.பத்மநாபன் தனது ஒரு படைப்பில் அவருடன் வேலை செய்த ஒருவரின் அந்தரங்க வாழ்வை எழுதி அந்த வாழ்விற்குரியவர் மன உளைச்சலுக்கு உள்ளாகி நீல.பத்மநாபனை அடிபின்னி எடுத்து நீல.பத்மநாபன் ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் சிகிச்சை பெறவேண்டியதாயிற்று. எல்லோருக்கும் பிரதியில் வாசிப்புச் சுவை காணல் சாத்தியமானதல்ல.

கி.ராஜ் நாராயனனுக்கு இப்படி ஒரு நிலை வந்தபோது “காலில் விழுந்து மன்னிப்புக் கேட்கிறேன் , என்னை விட்டிருங்க ! ” என அறிக்கை விட்டு அவ் விவகாரத்தைக் கடந்துபோனார். இது பக்குவம் .வாழ்வனுபவம் .

பெருமாள் முருகனுக்கு இப்படி ஒரு நிலை வந்தபோது ஒரு சமரசத்திற்கு இரு தரப்பும் தயார் நிலைக்கு வந்தபோது மூன்றாம் தரப்பான காலச்சுவடு சமரசத்திற்கு வாய்ப்பளிக்காமல் தனக்கான லாபங்களைப் பெற்றுக்கொண்டது.
கடைசியில் மிகப் பரிதாபத்திற்குரிய வகையில் பெருமாள் முருகன் இறந்துவிட்டான் ! என அறிக்கையிடவேண்டியதாயிற்று.

எழுத்தாளர்களுக்கும் சமூகத்திற்குமிடையிலான உறவு முரண்பாடான ஒன்றல்ல. விட்டேற்றிகளும் தற்குறிகளும் தம் பாவலாக்களை பெருமையாக அறிக்கையிட்டு தம்மை நான் நான் என விளம்பரப்படுத்தலாம்.

மெல்லெனப் பாயும் தண்ணீர் கல்லையும் உருகப் பாயும் எனச் சொல்வர்.
கருத்துச் சுதந்திரத்திற்கான போராட்டம் ஒரு நாள் கூத்தல்ல.
அது ஒரு ஞானத்தேடல்.
ஞானமாகி வந்ததே  எழுத்து !

What’s your Reaction?
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

யாழ்ப்பாணத்தை மிரட்டும் எலிக்காய்ச்சல்: பிந்திய நிலவரம்!

Pagetamil

யாழ் மாவட்ட செயலகத்தின் முன்பாக வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம்

Pagetamil

ஃபோர்ட் சிட்டி ஆணைக்குழு நியமனம்

east pagetamil

இலிங்கநகரில் இளைஞர் வள நிலையம் திறப்பு

east pagetamil

படகு கவிழ்ந்து ஒருவர் பலி மட்டக்களப்பில் சோகம்

east pagetamil

Leave a Comment