சதொச ஊழியர்களை பணியிலிருந்து விலக்கி அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் முதலாவது சாட்சியாளர் வெளிநாட்டில் தங்கியிருப்பதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு நேற்று அறிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, லஞ்ச ஊழல் ஆணைக்குழு சார்பில் ஆஜரான பிரதிப் பணிப்பாளர் கங்கா ஹெய்யன்துடுவ, சதொச நிறுவனத்தின் முன்னாள் பிரதிப் பொது முகாமையாளர் விபுல கித்சிறி சில்வா கடந்த ஆண்டு ஓய்வு பெற்று டுபாய்க்கு வெளிநாடு சென்றுள்ளதாக நீதிமன்றில் அறிவித்தார்.
சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு, வழக்கின் மூன்றாவது அரசு தரப்பு சாட்சிக்கு ஒக்டோபர் 12 ஆம் திகதி நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்குமாறு சம்மன் அனுப்பப்பட்டது. இந்த வழக்கு ஒக்டோபர் 12 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ வர்த்தக அமைச்சராக கடமையாற்றிய போது, ச.தொ.ச (லக் சதொச) முன்னாள் தலைவர் எராஜ் பெர்னாண்டோ மற்றும் முன்னாள் அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் ராஜ் மொஹிதீன் மொஹமட் சக்கீர் ஆகியோர் கூட்டுறவு மொத்த விற்பனை நிறுவன (CWE) ஊழியர்களை தேர்தல் பணிக்கு நியமித்ததன் மூலம் அரசுக்கு சட்டவிரோத நஷ்டத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நான்கு குற்றச்சாட்டுகளின் கீழ் இலஞ்ச சட்டத்தின் 70 ஆவது பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட மூவருக்கு எதிராக இந்த ஊழல் வழக்குகளை தாக்கல் செய்தார்.
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உட்பட குற்றம் சாட்டப்பட்ட மூவருக்கும் எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் வழக்குத் தொடரப்பட்டிருந்ததுடன், இலஞ்ச ஆணைக்குழுவின் மூன்று ஆணையாளர்களின் எழுத்துமூல அனுமதியின்றி தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன.