உகாண்டாவின் மேற்குப் பகுதியில் Kasese மாவட்டத்தில் உள்ள மபோண்ட்வே நகரில் உள்ள ஒரு பாடசாலையின் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதலில் இறந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது. பலர் கடத்தப்பட்டுள்ளதாக நகரத்தின் மேயர் மற்றும் உள்ளூர் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
கடத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை சரியாக தெரியவில்லை.
கிளர்ச்சியாளர்கள் தங்குமிடத்திற்கு தீ வைத்தபோது மாணவர்களில் சிலர் தீக்காயங்களுக்கு ஆளாகினர், மற்றவர்கள் துப்பாக்கியால் சுடப்பட்டனர் அல்லது வெட்டிக் கொல்லப்பட்டனர் என்று நகர மேயர் கூறினார். எவ்வாறாயினும், தாக்குதலின் தன்மை அல்லது பாதிக்கப்பட்டவர்கள் எவ்வாறு இறந்தனர் என்பதை பொலிசார் தெளிவாக குறிப்பிடவில்லை.
இராணுவ செய்தித் தொடர்பாளர் பெலிக்ஸ் குலாயிக்யே இறந்தவர்களின் எண்ணிக்கை 37 என்றார். எட்டு பேர் காயமடைந்தனர் மற்றும் ஆறு பேர் கடத்தப்பட்டதாக அவர் கூறினார்.
கொங்கோ ஜனநாயக குடியரசின் கிழக்கு பகுதியில் உள்ள ISIL (ISIS) குழுவிற்கு விசுவாசமான உகாண்டா குழுவான Allied Democratic Forces (ADF) இந்த கொடூரத்தை புரிந்ததாக பொலிசார் குற்றம்சாட்டினர்.
25 உடல்கள் மீட்கப்பட்டதாகவும், ஆபத்தான நிலையில் இருந்த எட்டு பேர் ப்வேரா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாகவும் அவர்கள் முன்னதாக தெரிவித்தனர். உயிரிழந்தவர்களில் 39 பேர் மாணவர்கள்.
கொங்கோ ஜனநாயக குடியரசின் எல்லையில் இருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் (1.2 மைல்) தொலைவில் உள்ள உகாண்டா மாவட்டத்தில் உள்ள காசியில் அமைந்துள்ள தனியாருக்குச் சொந்தமான பாடசாலையின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
“ஒரு தங்குமிடம் எரிக்கப்பட்டது மற்றும் உணவுக் கடை சூறையாடப்பட்டது” என்று தேசிய காவல்துறை செய்தித் தொடர்பாளர் பிரெட் எனங்கா கூறினார்.
இராணுவம் மற்றும் பொலிஸ் பிரிவுகள், விருங்கா தேசிய பூங்காவின் திசையில் எல்லைக்கு அப்பால் கொங்கோவுக்குள் தப்பி ஓடிய தாக்குதல்காரர்களை பின்தொடர்வதாக எனங்கா கூறினார்.
அங்குள்ள சர்வதேச ஊடக செய்தியாளர் கேத்தரின் சோய், பூங்காவின் பகுதி சுற்றி வளைக்கப்பட்டுள்ளது என்றார்.
“அங்குள்ள மக்கள் மிகவும் பயப்படுகிறார்கள், நிறைய பதட்டம் உள்ளது, அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று மக்களுக்குத் தெரியாது,” என்று அவர் கூறினார்.
கொங்கோவுக்குள் உகாண்டா துருப்புக்கள் “கடத்தப்பட்டவர்களை மீட்பதற்காக எதிரிகளை பின்தொடர்கின்றன” என்று இராணுவம் ஒரு அறிக்கையில் உறுதிப்படுத்தியது.
மேற்கு உகாண்டாவிற்கான இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் டிக் ஓலம், தாக்குதல் நடத்தியவர்கள் தாக்குதலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் நகரத்தில் தங்கியிருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
தாக்குதலுக்கு முன்னர் அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர் பாடசாலையின் அமைப்பைச் சரிபார்க்கச் சென்றதாக அவர் கூறினார்.
“தாக்குதல் நடத்தியவர்கள் வந்து பாடசாலை கட்டிட கதவைப் பூட்டினர். சிறுவர்கள் உண்மையில் எதிர்த்துப் போராட முயன்றனர், ஆனால் அவர்கள் வெற்றி பெற்றவில்லை. தாக்குபவர்கள் மெத்தைகளை கொளுத்தியிருந்தனர், ”என்று ஓலும் ம்போண்ட்வேயில் இருந்து செய்தியாளர்களிடம் கூறினார்.
“பெண்கள் தங்கும் அறையில், அவர்கள் கதவு திறந்திருப்பதைக் கண்டார்கள், எனவே அவர்களை வெட்டிக் கொன்றாகள்.”
சமீபத்திய ஆண்டுகளில் பொதுமக்கள் மீது, குறிப்பாக கிழக்கு கொங்கோவிற்கு அண்மையிலுள்ள உகண்டாவின் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் மீது பல தாக்குதல்களை நடத்தியதாக ADF அமைப்பின் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஏப்ரலில், குறைந்தது 20 பேரைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டது.
உகாண்டா அதிகாரிகள் 2021 இல் தலைநகர் கம்பாலாவில் நடந்த தற்கொலை குண்டுவெடிப்புகளுக்கு குழுவைக் குற்றம் சாட்டினர். அதற்கு எதிராக கொங்கோவில் கூட்டு வான் மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தினர். ஆனால், அந்த குழுவை கட்டுப்படுத்த முடியவில்லை.
கனிமங்கள் நிறைந்த கிழக்கு கொங்கோவிலுள்ள ஏராளமக ஆயுதக் குழுக்களில் ADF அமைப்பும் ஒன்று. இதன் தலைவரை பற்றிய தகவல் கொடுப்பவர்களுக்கு 5 மில்லியன் டொலர் வரை வெகுமதி அளிப்பதாக அமெரிக்கா கடந்த மார்ச்சில் அறிவித்தது.
உகண்டா ஜனாதிபதி முசெவேனி நிர்வாகத்திற்கு எதிராகப் போராடுவதற்காக, 1995 இல், உகாண்டா முஸ்லீம் விடுதலை இராணுவம் மற்றும் உகாண்டா விடுதலைக்கான தேசிய இராணுவம் (NALU) உள்ளிட்ட கிளர்ச்சிக் குழுக்களால் ADF உருவாக்கப்பட்டது.
இந்த அமைப்பை நீண்டகாலமாக கொங்கோ அரசுகள் ஆதரித்த. இவற்றின் மூலம் நாட்டில் ருவாண்டா மற்றும் உகாண்டா செல்வாக்கை தடுக்கலாமென அரசுகள் கணக்கிட்டன.
ஆனால், 2013 இல் கொங்கோ இராணுவத்தையும் இந்த குழு தாக்க தொடங்கியது. கொங்கோ இராணுவம் திருப்பி அடிக்க, அதன் தலைவர் ஜமில் முலுலு 2015 இல் தான்சானியாவுக்கு தப்பிச் சென்றார், அங்கு அவர் பயங்கரவாத குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு கொங்கோவிடம் ஒப்படைக்கப்பட்டார்.
சமீபத்திய ஆண்டுகளில், ADF ஐ.எஸ்.ஐ.எல் என்ற ஆயுதக் குழுவுடன் இணைக்கப்பட்டு, தௌஹீத் வௌ முஜாஹிதீன் – ஏகத்துவம் மற்றும் புனிதப் போராளிகளின் நகரம் (எம்.டி.எம்) மதீனா என்று தன்னைக் குறிப்பிடுகிறது.