நாரஹேன்பிட்டி அல்விட்டிகல மாவத்தையில் அமைந்துள்ள தொழிற்பயிற்சி அதிகாரசபையின் உதவி முகாமையாளரை கொடூரமான முறையில் தாக்கி கொலை செய்த பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் உட்பட 7 பொலிஸார் சந்தேகத்தின் பேரில் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹிக்கடுவை தெல்வத்த பகுதியைச் சேர்ந்த சமந்த ப்ரீத்தி குமார என்ற 41 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
ஜனவரி 10 ஆம் திகதி இரவு கொழும்பு தாமரைக் கோபுரத்திற்கு அருகில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் பொலிஸ் குழுவினால் ப்ரீத்தி குமார கைது செய்யப்பட்டார்.
போதைப்பொருள் வியாபாரி எனக் கூறி அவர் கொடூரமான முறையில் தாக்கப்பட்டமை குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தாக்குதலுக்கு உள்ளாகி ஆபத்தான நிலையில் இருந்த பிரித்தி குமார கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அன்றைய தினம் உயிரிழந்துள்ளார்.
இரகசியப் பொலிசார் நடத்திய விசாரணையில் அவருக்கும் போதைப்பொருள் கடத்தலுக்கும் தொடர்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

