இந்திய அமைதிப்படையால் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களை 33 ஆண்டுகளின் பின்னர் நினைவுகூறும் நிகழ்வு யாழ்ப்பாணம் புத்தூர் வாதரவத்தையில் நேற்று (05) மாலை இடம் பெற்றது.
1987 ஆம் ஆண்டு இதே நாளில் வாதரவத்தைப் பகுதியில் இந்திய அமைதிப்படையினரால் ஒன்பது பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
இறந்த பொது மக்களை நினைவு கூறுவதில் கடந்த காலங்களில் அச்சமான சூழல் நிலவிவந்தது. நேற்று வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் இளையகுட்டி பரஞ்சோதியின் தலைமையில் இறந்தவர்களின் உடைக்கப்பட்ட நினைவு தூபிக்கு அருகில் நினைவு கூரப்பட்டது.
அமைதிப்படையால் படுகொலை செய்யப்பட்ட தேரம் பிள்ளையார் ஆலயத்தில் மோட்ச அர்ச்சனை செய்யப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதன்போது படுகொலை செய்யப்பட்டவர்களின் பிள்ளைகள் மனைவி மற்றும் உறவினர்கள் ஆகியோரால் பொதுச்சுடர் மற்றும் நினைவுச் சுடர் ஏற்றி கண்ணீர் மல்க மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.



