பௌத்தம் மற்றும் ஏனைய மதங்கள் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட போதகர் ஜெரோம் பெர்னாண்டோவின் ‘மிராக்கிள் டோம்’ என்ற கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கு 3.3 பில்லியன் செலவிடப்பட்டுள்ளது என சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன நேற்று உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். .
போதகர் தனது பிரசங்கங்களை நடத்தும் கட்டிடத்தை நிர்மாணிப்பதற்காக இவ்வளவு தொகையை எவ்வாறு கண்டுபிடித்தார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என சஞ்சீவ ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
அவரது ஆன்மிகத் தலைவராகக் கருதப்படும் ‘உபெர்ட் ஏஞ்சல்’ சிம்பாப்வேயில் பணமோசடி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளதோடு, தங்கக் கடத்தல் குற்றச்சாட்டிலும் சிக்கியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தம்மைக் கைது செய்வதற்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரி போதகர் பெர்னாண்டோ தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவை உயர் நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்த மனுவை ஜூலை 28ஆம் திகதி பரிசீலிக்க உயர் நீதிமன்றம் நேற்று (05) தீர்மானித்துள்ளது.
போதகர் பெர்னாண்டோ தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்யுமாறு எல்லே குணவம்ச தேரர் இடைக்கால மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அவர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன முன்னிலையானார்.