இந்தியா

களேபரமான கரூர் ரெய்ட்

கரூர் மாவட்டத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் சகோதரர் வீடு, அவரது நிறுவனம் மட்டும் அவருக்குச் சொந்தமான இடங்களில் இன்று (மே 26) காலை வருமான வரித் துறையினர் சோதனை மேற்கொள்ள வந்தபோது பரபரப்பு ஏற்பட்டது. வருமான வரித் துறையினருடன் வாக்குவாதம், அவர்கள் வந்த கார் கண்ணாடி உடைப்பு என ரெய்டு நிகழ்விடம் போர்க்களமானது.

தமிழக அமைச்சரவையில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக இருப்பவர் வி.செந்தில் பாலாஜி. கரூர் மாவட்ட திமுக செயலாளராகவும் இருந்து வருகிறார். இவர் கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு அந்த வழக்கு ரத்தான நிலையில் மீண்டும் இந்த வழக்கை விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு உச்ச நீதிமன்றம் அண்மையில் அறிவுறுத்தியிருந்தது. அதன் நீட்சியாகத்தான் இன்று செந்தில் பாலாஜியின் சகோதரர் வீடு, அவருடைய நிறுவனங்கள், செந்தில்பாலாஜியின் நண்பர் வீடு என்று அதிகாரிகள் ரெய்டுக்கு ஒரே நேரத்தில் ஆஜராகினர்.

சென்னை, கரூர், கோவை, தெலங்கானா, பாலக்காடு, பெங்களூரு என மூன்று மாநிலங்களில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனையைத் தொடங்க, கரூரில் மட்டும் பிரச்சினையானது. கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் மற்றும் அமைச்சரின் ஆதரவாளர்களான துணை மேயர் தாரணி சரவணன், கொங்கு மெஸ் மணி வீடுகள் உள்பட 10 இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் இன்று அதிகாலை சோதனையைத் தொடங்கினர்.

கரூர் ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ளது அமைச்சர் செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் வீடு. அங்கு வந்த வருமான வரித் துறையினர் வீடு பூட்டியிருந்ததால் மெயின் கேட்டைத் திறந்து உள்ளே சென்றனர். ஆனால், அதற்குள் அங்கே திமுகவினர் திரண்டுவிட்டனர்.

வருமான வரித் துறை பெண் அதிகாரி ஒருவர் சோதனை நடத்த முயன்றபோது, அவரிடம் அங்கு குழுமியிருந்த திமுகவினர் அடையாள அட்டையை காண்பிக்குமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது பெண் அதிகாரிக்கும் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் திமுக தொண்டர் குமார் என்பவரை பெண் அதிகாரி தாக்கியதாக கூறப்படுகிறது. அப்பொழுது குமாருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் அங்கிருந்த திமுக தொண்டர்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையே, திமுக தொண்டர் குமாரை தாக்கியதாக பெண் அதிகாரியை கைது செய்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுகவினர் பெண் அதிகாரி வந்த காரை முற்றுகையிட்டனர். இது குறித்து தகவல் அறிந்ததும் கரூர் நகர காவல் நிலையத்தினர் சம்பவத்துக்கு வந்து பெண் அதிகாரியை மீட்டு அவர் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறி பெண் அதிகாரியை கரூர் நகர காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

நிகழ்விடத்தில் வருமான வரித் துறையினர் கார் கண்ணாடி உடைக்கப்பட்டு ரியர் மிரர் சேதப்படுத்தப்படும் காட்சிகளும், ஒப்பந்ததாரர் ஒருவர் வீட்டில் சுற்றுச் சுவரில் ஏறிக் குதித்து அதிகாரிகள் உள்ளே சென்ற காட்சியும் தொலைக்காட்சிகளில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

கரூர் ரெய்டு விவகாரம் ஊடக வெளிச்சத்துக்கு வர, கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஒரு தொலைக்காட்சிக்கு அளித்தப் பேட்டியில், “வழக்கமாக ரெய்டு செல்வதற்கு முன்னதாக வருமான வரித் துறையிடமிருந்து தகவல் வரும். ஆனால், அப்படியேதும் வராததால் இந்த முறை பாதுகாப்பிற்கு போலீஸாரை அனுப்பிவைக்க முடியவில்லை” என்றார்.

காவல் நிலையத்தில் வருமான வரித் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர், வருமான வரித் துறை அதிகாரிகளுடன் காவல் துறையினரும் பாதுகாப்புக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அதேபோல், மாவட்ட எஸ்.பி.யும் அதிகாரிகளுடன் புறப்பட்டுச் சென்றார். கரூரில் ரெய்டு நடக்கும் பகுதிகளில் அதிரடிப்படையினரும் சென்றுள்ளனர். திமுகவினர் தலையீட்டால் வருமான வரி சோதனை நிறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், போலீஸார் மற்றும் அதிரடிப்படையினர் பாதுகாப்புடன் சோதனை நடந்து வருகிறது. திமுகவினர் தாக்கியதாகக் கூறி வருமான வரித் துறை அதிகாரிகள் 4 பேர் மருத்துவமனையில் அனுமதியாகியுள்ளனர்.

இந்த வருமான வரி சோதனை பாஜகவின் மிகக் கேவலமான அரசியல் என்று திமுக கருத்து தெரிவித்துள்ளது. திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, இது குறித்து கூறுகையில், “முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், வருமானவரித் துறை சோதனை நடப்பது பாஜகவின் மிகக் கேவலமான அரசியல். செந்தில்பாலாஜியை முடக்க வேண்டும் என்பது அண்ணாமலையின் திட்டம்” என்று கூறினார்.

இதற்கிடையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில்பாலாஜி, “இதுபோன்ற சோதனைகளை நாங்கள் புதிதாக எதிர்கொள்ளவில்லை. சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாகவும் இவ்வாறாக சோதனை நடைபெற்றது. தற்போது இச்சோதனை எனது இல்லத்தில் நடக்கவில்லை, எனது சகோதரர் மற்றும் அவரது நண்பர்கள் இல்லங்களில் சோதனை நடந்து வருகிறது. விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்ததையடுத்து கரூருக்கு தொடர்பு கொண்டு கட்சியினர்

அண்மையில்தான் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து அமைச்சர் செந்தில் பாலாஜியை உடனடியாக நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்தியிருந்தார். இத்தகைய சூழலில் இன்று அமைச்சரின் சகோதரர் வீட்டில் ரெய்டு நடக்கிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

“துளசி வாசம் மாறினாலும் தவசி புள்ள…” – சினிமா வசனம் பேசி விஜய பிரபாகரன் வாக்கு சேகரிப்பு

Pagetamil

டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கேஜ்ரிவாலை மேலும் 4 நாட்கள் விசாரிக்க அனுமதி

Pagetamil

“எம்பி சீட்டுக்காக கணேசமூர்த்தி தற்கொலை என்பதில் துளியும் உண்மையில்லை” – வைகோ

Pagetamil

ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் ரூ.1.5 கோடியை இழந்த கணவர்: கடன் கொடுத்தவர்கள் நெருக்கடியால் மனைவி தற்கொலை

Pagetamil

மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு

Pagetamil

Leave a Comment