மதீஷ பத்திரனவின் குடும்பத்துடன் தோனி எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டிருக்கிறார் அவரது சகோதரி விஷுக பத்திரன.
இந்த சீசனில் இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றுவிட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய தூண் மதீஷ பத்திரனதான். இந்த சீசனின் சிறந்த டெத் பௌலர் என சொல்லும் அளவுக்கு கடைசிகட்ட ஓவர்களில் கலக்கியிருந்தார் மதீஷ. இளம் வீரரான பத்திரனவின் இந்த எழுச்சிக்கு தோனியும் ஒரு முக்கியமான காரணம் என அவருக்கும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.
“இலங்கை ரசிகர்களே உங்களுக்காக ஒரு வைரத்தை தோனி பட்டைத்தீட்டிக் கொண்டிருக்கிறார்” என வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே குறிப்பிட்டிருந்தார்.
தோனியும் தொடர்ந்து பத்திரனவின் பந்துவீச்சை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் பாராட்டி வந்தார். இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்திற்கு பத்திரன குறித்து அறிவுரை எல்லாம் கொடுத்தார் அவர். வளர்ப்பு மகன் போல பத்திரனவை தோனி பார்த்துக்கொள்கிறார் என இணையத்தில் மீம்களும் பறந்தன. இந்நிலையில் மதீஷ பத்திரனவின் குடும்பத்துடன் தோனி எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டிருக்கிறார் அவரது சகோதரி விஷுக பத்திரன.
அதில், “மதீஷ இப்போது தேர்ந்த கைகளில் இருக்கிறார். ‘அவரைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். எப்போதும் அவருடன் நான் இருப்பேன்’ என தோனி எங்களிடம் சொன்னார்” எனக் கூறியிருக்கிறார்.
“இப்படியான விஷயத்தை நாங்கள் கனவில் கூட நினைத்துப் பார்த்ததில்லை” என இந்தச் சந்திப்பு குறித்து உருகியிருக்கிறார் அவர்.