இலங்கை உள்ளூர் எரிபொருள் சந்தையில் நுழைந்துள்ள ‘சினோபெக்’ நிறுவனத்திற்கு உள்ளூர் முகவராக செயல்படும் நிறுவனத்தின் உரிமையாளரின் மகளை, மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர திருமணம் செய்ய உள்ளார் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்தார்.
இதை தொடர்ந்து, பாராளுமன்றத்தில் அமைச்சர் காஞ்சன விஜேசேகரவும், சமிந்த விஜேசிறியும் வார்த்தைப் பரிமாற்றத்தில் ஈடுபட்டனர்..
இந்தக் குற்றச்சாட்டை அமைச்சர் விஜேசேகர மறுத்தார். “நிறுவனம் அதன் உள்ளூர் முகவர் மற்றும் பிற விவரங்களைப் பற்றி ஒரு அறிக்கையை வெளியிட்டது. எனினும், என் மீது சுமத்தப்பட்டுள்ள பொய்யான குற்றச்சாட்டின் பேரில், பிறிதொரு திகதியில் சிறப்புரிமைப் பிரச்னையை எழுப்புவேன்“ என்றார்.
சீன நிறுவனத்தை உள்ளூர் எரிபொருள் சந்தையில் நுழைய அனுமதிக்கும் போது தலையீடு இருந்ததா என்பதை அறியவே கேட்டதாகவும், அமைச்சர் மீது சேறு பூச விரும்பவில்லை என்றும் பாராளுமன்ற உறுப்பினர் விஜேசிறி தெரிவித்தார் .
“சிறப்புரிமைக் குழு பட்டலந்த போன்று மற்றொரு சித்திரவதை இல்லமாக மாறக்கூடாது” என்றும் சமிந்த விஜேசிறி சுட்டிக்காட்டினார்.