இந்தியா

புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை 19 எதிர்க்கட்சிகள் புறக்கணிக்க முடிவு

புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்புவிழாவை புறக்கணிக்க 19 எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மத்திய நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் பிரகலாத் ஜோஷி எதிர்க்கட்சிகளைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் அதிநவீன வசதிகளுடன் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது. அதை திறந்து வைக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அழைப்பு விடுத்தார். அதன்படி, வரும் 28-ம் தேதி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தைப் பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்து வருகிறது. இந்த விழாவில் பங்கேற்க எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

ஆனால், நாட்டின் முதல் குடிமகள் என்ற முறையில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முதான் நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் போர்க் கொடி தூக்கி உள்ளன.

மேலும், இந்துத்துவா சித்தாந்தவாதியும் மகாத்மா காந்திக்கு எதிரான கருத்து கொண்டவருமான வி.டி.சாவர்க்கர் பிறந்த நாளில் இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதையும் சில கட்சிகள் விமர்சனம் செய்துள்ளன.

இந்த சூழ்நிலையில், திறப்பு விழாவை புறக்கணிக்கப் போவதாக காங்கிரஸ், இடதுசாரிகள், திரிணமூல், ஆம் ஆத்மி, திமுக, ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாதி, உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, ஏஐஎம்ஐஎம் உட்பட 19 எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன.

அவமதிக்கும் செயல்

இதுகுறித்து எதிர்க்கட்சிகள் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை தானே திறந்து வைக்க பிரதமர் மோடி முடிவு செய்திருப்பது குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை ஓரம்கட்டும் முயற்சி. இது அவரை அவமதிக்கும் செயல் மட்டுமல்ல, ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் ஆகும்.

இந்த முறையற்ற செயல் குடியரசுத் தலைவர் அலுவலகத்தை அவமதிக்கும் செயல் மட்டுமல்லாது, அரசியல் சாசனத்தையே அவமதிக்கும் செயல் ஆகும்” என கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘‘புதிய நாடாளுமன்ற கட்டிடம் ‘ஈகோ’வால் கட்டப்படவில்லை. அரசியலமைப்புச் சட்டத்தின் மதிப்புகளால் கட்டப்பட்டுள்ளது. மேலும், கட்டிடத்தை திறந்து வைக்க குடியரசுத் தலைவரை அழைக்காதது அல்லது விழாவுக்கே அழைக்காமல் இருப்பது இந்திய நாட்டுக்கு பெருத்த அவமானம். நாட்டின் மிக உயர்ந்த குடியரசுத் தலைவர் பதவிக்கு அவமானம்’’ என்று குற்றம் சாட்டியுள்ளார்.

பாஜக பதில்

முன்னதாக பாஜக செய்தித் தொடர்பாளர் ஜெய்வீர் ஷெர்ஜில் கூறும்போது, ‘‘சொந்த கட்சிக்குள் இருக்கும் தலைவர்களை எப்படி மதிக்க வேண்டும் என்பதை ராகுல் காந்தி முதலில் கற்றுக் கொள்ள வேண்டும். அதன் பிறகு மற்றவர்களுக்கு அவர் அறிவுரை கூறட்டும்’’ என்று விமர்சனம் செய்தார்.

சபாநாயகர் முடிவு

இந்நிலையில், மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி நேற்று கூறியதாவது: நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்கும் முடிவை எதிர்க்கட்சித் தலைவர்கள் எடுத்திருப்பது துரதிருஷ்டவசமானது. அந்த முடிவை எதிர்க்கட்சியினர் மறுபரிசீலனை செய்ய வேண்டும். நாடாளுமன்றத்தின் பாதுகாவலராக இருப்பவர் சபாநாயகர். அவர் எடுத்த முடிவின்படி, நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்க பிரதமருக்கு அழைப்பு விடுத்துள்ளார். நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிப்பதன் மூலம் தேவையில்லாத ஒரு விஷயத்தை பிரச்சினையாக்க கூடாது. இவ்வாறு அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறினார்.

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசுத் தலைவர்தான் திறக்க வேண்டும். பிரதமர் மோடி திறக்கக் கூடாது என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் கூறினார். தற்போது நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கு, வழங்கப்பட்ட தங்க செங்கோலை, அலகாபாத் அருங்காட்சியகத்தில் இருந்து எடுத்து வந்து புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் மக்களவை தலைவர் இருக்கைக்கு அருகே நிறுவ பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது காங்கிரஸ் கட்சிக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கோகுல்ராஜ் கொலை வழக்கு: யுவராஜின் ஆயுள் தண்டனையை உறுதி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்!

Pagetamil

திருமண வரவேற்பில் தாம்பூல பையுடன் மதுப் போத்தல்: தாய்மாமன் அளித்த பரிசால் சர்ச்சை

Pagetamil

மறக்க முடியாத பழைய தோழி: திருமணமான 20 நாளில் காதல் மனைவி கொலை!

Pagetamil

இலங்கையிலிருந்து படகில் கடத்திச் செல்லப்பட்ட 33 Kg தங்கக்கட்டிகள்!

Pagetamil

மத்திய அரசின் அவசர சட்டத்தை திமுக எதிர்க்கும்: கேஜ்ரிவால் சந்திப்புக்குப் பின் முதல்வர் ஸ்டாலின் உறுதி

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!