இந்திப் படம் ஒன்றிலிருந்து தான் விலகியது குறித்தும், அதற்கு காரணம் இயக்குநர் ஒருவரின் மனிதத்தன்மையற்ற செயல் என்றும் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா குற்றம்சாட்டியுள்ளார்.
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் பிரியங்கா சோப்ரா 2000ஆம் ஆண்டு உலக அழகிப் பட்டம் வென்றவர். உலகின் அதிக சம்பளம் பெறும் நடிகைகளில் ஒருவரான இவர் பிரபல அமெரிக்க பாப் பாடகரான நிக் ஜோனஸை கடந்த 2018ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு பாலிவுட் சினிமாவில் பெரியளவில் நடிக்கவில்லை என்றாலும் அவ்வப்போது சில ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில், இந்திப் படம் ஒன்றிலிருந்து தான் விலகியது குறித்தும், அதற்குக் காரணம் இயக்குநர் ஒருவரின் மனிதத்தன்மையற்ற செயல் என்றும் பிரியங்கா சோப்ரா பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்
அந்த பேட்டியில் அவர் கூறியதாவது:
கதைப்படி அந்த படத்தில் நான் ஒரு அண்டர்கவர் அதிகாரி. ஒரு காட்சியில் நான் ஒரு ஆளை மயக்கி வீழ்த்த வேண்டும். அந்தக் காட்சியில் நான் ஒரு ஆடையை களைய வேண்டும். ஆனால் என்னுடைய ஆடை வடிவமைப்பாளரிடம் அந்தப் படத்தின் இயக்குநர் என்னை உள்ளாடையில் பார்க்க வேண்டும்; இல்லையென்றால் ஏன் மக்கள் இந்தப் படத்தை வந்து பார்க்கப் போகிறார்கள்? என்று என் முன்னாலேயே கூறினார். அது மிகவும் மனிதத்தன்மையற்ற ஒரு தருணமாக இருந்தது. என் அப்பாவின் அறிவுரைப்படி இரண்டு நாட்களிலேயே அந்தப் படத்திலிருந்து விலகி விட்டேன். என்னால் அந்த இயக்குநரை தினமும் பார்க்க முடியாது. தயாரிப்பு நிறுவனம் எனக்காக செலவு செய்த தொகையையும் நான் திருப்பிக் கொடுத்துவிட்டேன்.
இவ்வாறு பிரியங்கா சோப்ரா கூறியுள்ளார்.