ரஷ்யாவின் எல்லைக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்திய உக்ரைனிய ஆயுதக்குழு விரட்டியடிக்கப்பட்டதாகவும், 70 பேர் கொல்லப்பட்டதாகவும் ரஷ்யா அறிவித்துள்ளது.
உக்ரைனில் இருந்து ரஷ்யாவின் பெல்கோரோட் பகுதிக்குள் நுழைந்து ரஷ்யப் படைகளுடன் சுமார் 24 மணி நேரம் போரிட்ட குழு கிட்டத்தட்ட அழிக்கப்பட்டு, ஏனையவர்கள் உக்ரைனுக்கு விரட்டியடிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு தொடங்கியதில் இருந்து, ரஷ்ய எல்லைக்குள் பெருமெடுப்பில் நடத்தப்பட்ட தாக்குதல் இதுவாகும். ஆயுதக்குழுக்களை அழிக்க செவ்வாயன்று ஜெட் மற்றும் பீரங்கிகளை அனுப்பியதாக ரஷ்யா கூறியது.
சண்டையின் போது பீரங்கி மற்றும் மோட்டார் குண்டுகளால் 13 பேர் காயமடைந்ததாகவும், திங்கட்கிழமை வெளியேற்றும் போது ஒரு பெண் இறந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். கொசின்கா கிராமத்தில் இரண்டாவது குடிமகன் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
ரஷ்ய அதிகாரிகளின் கூற்றுப்படி, சண்டையின் போது ஒன்பது எல்லை கிராமங்கள் வெளியேற்றப்பட்டன.
“மொத்தத்தில், 70 க்கும் மேற்பட்ட போராளிகள், நான்கு கவச வாகனங்கள் மற்றும் ஐந்து பிக்கப்கள் அழிக்கப்பட்டன. இன்று, பெல்கோரோட் பிராந்தியத்தில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை முடிவடைந்துள்ளது“ என்று ரஷ்ய அரசு செய்தி நிறுவனம் RIA நோவோஸ்டி புதன்கிழமை அறிக்கை செய்தது.
தாக்குதல் நடத்தியவர்களை “உக்ரேனிய நாசவேலை மற்றும் உளவு குழு” என்று குறிப்பிடுகிறது.
வழக்கம் போல உக்ரைன் தாக்குதலுக்கான பொறுப்பை மறுக்க, ரஷ்ய கிளர்ச்சிக்குழுவே தாக்குதல் நடத்தியதாக உரிமைகோரியது. ஃப்ரீடம் ஒஃப் ரஷ்யா லெஜியன் மற்றும் ரஷ்ய வாலண்டியர் கார்ப்ஸ் (RVC) ஆகியன தாமே தாக்குதலை நடத்தியதாக குறிப்பிட்டன.
எனினும், அவர்களின் பெயரில் உக்ரைனே தாக்குதலை நடத்தியிருக்கலாமென கருதப்படுகிறது.