தையிட்டியில் கைது செய்யப்பட்ட 9 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரையை அகற்றக் கோரி தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் நேற்று 2வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எனினும், போராட்டம் நடத்த நீதிமன்றம் தடைவிதித்ததாக தெரிவித்து, பொலிசார் அராஜகமாக நடந்து, போராட்டக்காரர்களை கைது செய்தனர். நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரனை பலவந்தமாக தூக்கி அகற்ற முயன்றனர்.
எனினும், பொலிசாரின் முயற்சி வெற்றிபெறவில்லை. நேற்று இரவு மற்றும் இன்று பகல் முழுவதும் செ.கஜேந்திரன் தனிமனிதராக அங்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
நேற்று கைது செய்யப்பட்ட 9 பேரையும் உடனடியாக நீதிமன்றத்தில் முற்படுத்தாமல் பொலிசார் இழுத்தடிப்பு செய்து இன்று மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர்.
கைதானவர்களை விளக்கமறியலில் வைக்க பொலிசார் கோரினர். எனினும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்டத்தரணிகள் அதை எதிர்த்தனர்.
இதையடுத்து, 2.30 மணிக்கு கட்டளையை பிறப்பிப்பதாக நீதவான் அறிவித்திருந்தார்.
இன்று 2.30 மணிக்கு மீண்டும் வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்ட போது, கைதானவர்களை பிணையில் விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன் ஜனநாயகரீதியிலான போராட்டங்களை தடுக்க முடியாதென்றும் உத்தரவிட்டது.